யூரோ கிண்ணக் காற்பந்துப் போட்டி தகுதிச்சுற்று ஆட்டம்: ஆட்டங்கண்டது பிரான்ஸ்

இஸ்தான்புல்: அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் யூரோ கிண்ணக் காற்பந்துப் போட்டியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் உலகக் கிண்ண நடப்பு வெற்றியாளரான பிரான்சை 2-0 எனும் கோல் கணக்கில் துருக்கி தனது சொந்த மண்ணில் வென்றது. இந்த மகத்தான வெற்றியின் மூலம் ‘எச்’ பிரிவில் துருக்கி முதலிடம் வகிக்கிறது.

இந்த ஆட்டத்தை வலுவான நிலையில் தொடங்கிய துருக்கி, ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் அதன் முதல் கோலை அடித்தது. ‘ஃப்ரீகிக்’ மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய கான் அய்ஹான், பந்தைத் தலையால் முட்டி கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட்டு முன்னிலையை வலுப்படுத்தியது துருக்கி. பிரெஞ்சு தற்காப்பு ஆட்டக்காரர்களைக் கடந்து கோல் எல்லையை நோக்கி வேக மாக ஓடிய செஞ்சிஸ் உண்டர், பந்தை வலைக்குள் புகுத்தினார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரெஞ்சு ஆட்டக்காரர்கள் ஆட்டத்தின் வேகத்தை அதிகப் படுத்தினாலும் கோல் அடிக்கும் பல வாய்ப்புகளை நழுவவிட்டனர்.

எதிரணியின் வலுவான தற்காப்பும் கோல்காப்பாளர் வெளிப் படுத்திய சிறந்த ஆட்டத்திறனும் பிரெஞ்சு வீரர்களைத் திணற வைத்தது.

ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் துருக்கியின் மூன்றாவது கோல் போடும் வாய்ப்பைத் தவறவிட்டார் புராக் இல்மாஸ்.

தகுதிச் சுற்று ஆட்டங்களில் தான் இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களில் அனைத் தையும் வென்றுள்ள துருக்கி, தற்போது ‘எச்’ பிரிவில் ஒன்பது புள்ளிகளுடன் முன்னிலை வகிக் கிறது.

பிரான்சும் ஐஸ்லாந்தும் ஆறு புள்ளிகளுடன் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

மேலேறிவரும் ஜெர்மனி

‘சி’ பிரிவில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் மூன்று முறை ஐரோப்பிய வெற்றியாளரான ஜெர்மனி, 2-0 எனும் கோல் கணக்கில் பெலருஸ் குழுவை வீழ்த்தியது.

கடந்த ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தரும் விதமாக போட்டியிலிருந்து வெளி யேறிய ஜெர்மனி, யூரோ தகுதிச் சுற்று ஆட்டங்களிலாவது தனது பெயரைப் எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பின் வெளிப்பாடு நேற்றைய ஆட்டத்தில் தென் பட்டது.

மான்செஸ்டர் சிட்டி ஆட்டக் காரர் லிராய் சானேயும் பொரு‌ஷிய டோர்ட்மண்ட் ஆட்டக்காரர் மார்கோ ராயசும் ஜெர்மனி தரப்பில் இரு கோல்களை அடித்து வெற்றியைத் தேடித் தந்தனர். யூரோ தகுதிச் சுற்றில் தான் இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஜெர்மனி வென்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெர்மனியின் தொடக்க தகுதிச் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்தை வென்றிருந்தது.

‘சி’ பிரிவில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் எஸ்டோ னியாவை 2-1 எனும் கோல் கணக்கில் வட அயர்லாந்து வென்றது. அக்குழு விளையாடிய மூன்று ஆட்டங்களில் அனைத்தையும் வென்று பிரிவில் முதலிடம் வகிக்கிறது.

இரு ஆட்டங்கள் விளையாடி உள்ள ஜெர்மனி, ஆறு புள்ளி களுடன் இரண்டாவது நிலையில் உள்ளது. பெலருஸ் இதுவரை விளையாடியுள்ள மூன்று ஆட்டங் களில் அனைத்தையும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது.

பீடு நடை போடும் இத்தாலி

நேற்று நடைபெற்ற மற்றொரு யூரோ கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் கிரீஸ் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் வென்று இத்தாலி வாகை சூடியது.

இந்த வெற்றியோடு சேர்த்து இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் வென்றுள்ள இத்தாலி, ‘ஜே’ பிரிவில் முதல் நிலையில் உள்ளது. அக்குழு விளையாடிய மூன்று ஆட்டங் களிலும் தனக்கு எதிராக ஒரு கோலைக்கூட வலைக்குள் விழ விடவில்லை.

நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் 10 நிமிட இடைவெளியில் இத்தாலி மூன்று கோல்களைப் புகுத்தியது. ஆட்டத்தின் இரண் டாவது பாதியில் கிரீஸ் ஆட்டத் திறனை தீவிரப்படுத்தியபோதும் அதனால் கோலடிக்க முடிய வில்லை.

நேற்று நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் போஸ்னியாவை 2-0 எனும் கோல் கணக்கில் வென்ற ஃபின்லாந்து, ஆறு புள்ளிகளுடன் ‘ஜே’ பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்த ஆட்டத்தில் இத்தாலி போஸ்னி யாவை எதிர்கொள்கிறது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உலகக் கிண்ண வெற்றியாளர் பிரான்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் தங்களுக்கு கிடைத்த முக்கிய வெற்றியைக் கொண்டாடும் துருக்கிய ஆட்டக்காரர்கள். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!