பாகிஸ்தான் அணியை பந்தாடியது ஆஸ்திரேலியா

பாகிஸ்தான் அணியை பந்தாடியது ஆஸ்திரேலியா

2 mins read
cbd41ea4-4da8-467b-ab05-167191f6ed55
பிரிட்டனின் டான்ட்டனில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலியா. வெற்றி மகிழ்ச்சியில் திளைக்கும் ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்களுடன் இணைந்து தம்படம் எடுத்து மகிழும் அந்த அணியின் டேவிட் வார்னர். படம்: ராய்ட்டர்ஸ் -

டான்ட்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய பாகிஸ்தான் அணி மண்ணைக் கவ்வியது.

பிரிட்டனின் டான்ட்டனில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அகமது பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

பிஞ்ச் 82 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய டேவிட் வார்னர் 107 ஓட்டங்கள் எடுத்த பின் வெளியேறினார்.

ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20), ஷான் மார்ஷ் (23), கவாஜா (18), அலெக்ஸ் ஹேரி (20) கவுல்டர் நைல் (2) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா 49 ஓவரில் 307 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார்.

முகமது அமிரின் அபார பந்து வீச்சால் கடைசி 48 பந்தில் 39 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து பின்னடைவைச் சந்தித்தது.

அதன் பின்னர், 308 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 53 ஓட்டங்களில் வெளியேறினார்.

பாபர் அசாம் 30 ஓட்டங்களிலும், முகமது ஹபீஸ் 46 ஓட்டங்களிலும், ஹசன் அலி 35 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

இறுதிக்கட்டத்தில் அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமதும், வகாப் ரியாசும் வெற்றிக்காக போராடினர்.

ரியாஸ் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சர்ப்ராஸ் 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் 266 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.