89 ஓட்டங்களில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

89 ஓட்டங்களில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

2 mins read
8389d1ac-7fc1-4d4e-b981-0720990c5bf0
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 89 ஓட்டங்களில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. அங்கு கூடியிருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியக் கொடியை ஏந்தியவாறு வெற்றிக் களிப்பை வெளிப்படுத்தினர். படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டக்வத் லுவிஸ் முறைப்படி இந்திய அணி 89 ஓட்டங்களில் அபார வெற்றி பெற்று உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 7வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது.

உலக கிண்ணத் தொடரின் 22வது லீக் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா = பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டியைக் காண மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

'பூவாதலை­யா'வில் பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ஃபராஸ் அகமது பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.­எல்.­ ராகுல் களமிறங்கினர்.

தவான் இல்லாத தொடக்கம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். உலகக் கிண்ணத் தொடரில் முதன் முதலாகத் தொடக்க வீரராகக் களமிறங்கியதால் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார்.

மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி கே.எல்.ராகுலின் பதற்றத்தைத் தணித்தார். ராகுல் நிதனமாக விளையாட மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடியாக ஆட அணியின் ஓட்டம் சீராக உயர்ந்தது.

இந்திய அணி 136 ஓட்டங்கள் எடுத்திருந்த போது கே.எல்.ராகுல் 57 ஓட்டங்களில் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து அணித்தலைவர் விராத் கோஹ்லி களமிறங்கினார்.

அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 114 பந்துகளில் 140 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் சிறிதுநேரம் ஆட்டம் தடைப்பட்டது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ஓட்டங்கள் குவித்தது.

பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி டக்வத் லுவிஸ் முறைப்படி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். உலகக் கிண்ண வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோல்வியடையாத வரலாற்றுச் சாதனையை இந்தியா தன்வசமே தக்கவைத்துக் கொண்டது.