பர்மிங்ஹம்: எட்ஜ்பாஸ்டனில் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நடைபெற்றது. விளையாட்டுத் தளம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவராகக் குறைக்கப்பட்டது.
242 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி வீரர்கள் மார்ட்டின் கப்தில், காலின் மன்ரோ களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலே நியூசிலாந்து அணி வீரர் காலின் மன்ரோ 9 (5) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரபடா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்ட மிழந்தார்.
அடுத்ததாக நியூசிலாந்து அணித் தலைவர் வில்லியம்சன் களம் இறங்கினார். கப்தில் மற்றும் வில்லியம்சன் இணைந்து நின்று ஓட்டங்களை உயர்த்த தொடங்கினர். இவர்களின் ஜோடியைப் பிரிக்க நினைத்த தென் ஆப்பிரிக்கா வீரர் பெலக்வாயோ ஆட்டத்தின் 14.6 வது ஓவரில் குப்தில் 35 (59) விக்கெட்டை எடுத்தார். அடுத்துக் களம் இறங்கிய ராஸ் டெய்லர் 1 (2), டாம் லாதம் 1 (4), ஜேம்ஸ் நீஷம் 23 (34) வந்த வேகத்தில் வெளியேறினர்.
தென்னாப்பிரிக்கா வீரர் கிறிஸ் மோரிஸ் தொடர்ந்து அடுத்தடுத்த ஓவரில் நியூசிலாந்து அணியின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கிரான்ட்ஹோம் களம் இறங்கினர்.
கிரான்ட்ஹோம் மற்றும் அணித் தலைவர் வில்லியம்சன் இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்த தொடங்கினர். இதனி டையே 14 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து வீரர் கிரான்ட்ஹோம் 60 (47) ஓட்டங்கள் எடுத்திருந்த போது நிகிடி வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 8 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து அணி விளையாடியது. ஆட்டத்தின் 48.1வது ஓவரில் ஓர் ஓட்டம் எடுத்தது. அடுத்து அணித் தலைவர் வில்லியம்சன் 48.2 வது ஓவரில் சிக்சர் அடித்துத் தனது சதத்தைப் பதிவு செய்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 48.3 ஓவர் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 245 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி வீரர் மிட்செல் சான்ட்னெர், வில்லியம்சன் இருவரும் களத்தில் கடைசிவரை நிலைத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மார்ட்டின் கப்தில் 35 ஓட்டங்களும், கிரான்ட்ஹோம் 60 ஓட்டங்களும், கேப்டன் வில்லியம்சன் 106 ஓட்டங்களும் எடுத்தனர்.
தென்ஆப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட், பெலக்வாயோ, ரபடா மற்றும் நிகிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

