உருகுவேயின் லுவிஸ் சுவாரெஸ் எவ்வளவுக்கு எவ்வளவு திறமையான வீரரோ அவ்வளவுக்கு அவ்வளவு வெற்றி ஒன்றே குறி என்ற சிந்தனையில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் வீரரும்கூட.
இப்படித்தான் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையில் சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க் கிழமை அதிகாலை சிலி நாட்டுடன் கோப்பா அமெரிக்கா காற்பந்து போட்டி ஒன்றில், அவர் கோல் வலை நோக்கி அடித்த பந்தை தமது கையால் தடுத்து நிறுத்திய கோல்காப்பாளர் மீது, அவர் கோல்காப்பாளர் என்பதையே ஒரு நிமிடம் மறந்து, பந்தைக் கையால் தடுத்தார் என நடுவரிடம் புகார் தெரிவித்தார்.
பின்னர், தமது தவற்றை உணர்ந்தவராய் தமது தலையில் கைகளை வைத்துக்கொண்டு அசடு வழிந்தார்.
இதேபோல், ஒரு கட்டத்தில் காற்பந்து ரசிகர் ஒருவர் திடலில் ஊடுருவி களேபரத்தை உண்டு பண்ண அவரை சிலி காற்பந்து வீரர் ஒருவர் எதிர்கொள்ள, அவர் தப்பாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் கூறியுள்ளார் சுவாரெஸ்.
இதே சுவாரெஸ் சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் இத்தாலிய வீரரான ஜியோர்ஜியோ செலினியின் காதைக் கடித்து பின்னர் நான்கு மாதங்களுக்கு காற்பந்து விளையாட்டு எதிலும் விளையாட முடி யாத நிலை இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
இதனால் தற்பொழுது காற்பந்து ரசிகர்கள் இவர் காற்பந்து பித்தலாட்டத்தின் உச்சத்தைத் தொட்டுவிட்டதமாக கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
இது ஒருபுறமிருக்க, சிலிக்கு எதிரான போட்டியில் சுவாரெஸின் சக வீரரான எடின்சன் கவானி ஆட்டத்தின் 82ஆம் நிமிடத்தில் கோல் போட உருகுவே காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

