கோப்பா அமெரிக்கா: வெனிசுவேலாவை வென்ற அர்ஜெண்டினா; அரையிறுதியில் பிரேசிலுடன் மோதல்

கோப்பா அமெரிக்கா: வெனிசுவேலாவை வென்ற அர்ஜெண்டினா; அரையிறுதியில் பிரேசிலுடன் மோதல்

2 mins read

ரியோ டி ஜெனிரோ: தென்னமெரிக்க காற்பந்துக் குழுக்கள் பங்கேற்கும் கோப்பா அமெரிக்கா போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் வெனிசுவேலாவை 2-0 எனும் கோல் கணக்கில் அர்ஜெண்டினா வீழ்த்தியது. இதன் மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அர்ஜெண்டினா, இப்போட்டியை ஏற்று நடத்தும் பலம் வாய்ந்த பிரேசில் குழுவை அச்சுற்றில் எதிர்கொள்கிறது.

நடந்து முடிந்த மற்றொரு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் பிரேசில் பெனால்டியின் மூலம் பாராகுவே குழுவை வென்றிருந்தது.

கோப்பா அமெரிக்கா போட்டியில் கடைசியாக அர்ஜெண்டினா, பிரேசில் குழுக்கள் 2007ஆம் ஆண்டில் இறுதிச் சுற்றில் பொருதின. அப்போது பிரேசிலிடம் 3-0 எனும் கோல் கணக்கில் அர்ஜெண்டினா தோல்வியைத் தழுவியது. எனவே, பரம எதிரியான பிரே சிலிடம் கிடைத்த அத்தோல்விக்கு அர்ஜெண்டினா பழிதீர்க்க முனையும் என்பதால் எதிர்வரும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

நடப்பு போட்டியில் அர்ஜெண்டினா தட்டுத் தடுமாறி காலிறுதிவரை வந்து உள்ளது. முதல் சுற்று ஆட்டங்களில் கொலம்பியாவிடம் தோல்வி கண்ட அர்ஜெண்டினா, பாராகுவேயிடம் சமநிலை கண்டது. இதற்கு முந்தைய ஆட்டத்தில் கத்தார் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் அக்குழு வென்றிருந்தது.

இருந்தாலும், காலிறுதியில் வெனிசுவேலாவிடமிருந்து சோதனையை எதிர் பார்த்திருந்த அர்ஜெண்டினிய ஆட்டக்காரர்கள், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கார்னர் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி குழுத் தலைவர் லயனல் மெஸ்ஸி அனுப்பிய பந்தைத் தாக்குதல் ஆட்டக்காரர் லவ்டாரோ மார்ட்டினேஸ் கோலாக் கினார்.

இதனால் பின்னிலைக்குத் தள்ளப்பட்ட வெனிசுவேலா குழு, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. ஆட்டத்தைச் சமன் செய்ய வெனிசுவேலாவின் தொடர் தாக்குதல் வேட்டையை அர்ஜெண் டினிய கோல்காப்பாளர் ஃபிராங்கோ அர்மானி சிறப்பாகத் தடுத்தார்.

இந்நிலையில், ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் அர்ஜெண்டினிய குழு தரப் பில் மாற்று ஆட்டக்காரர் ஜியோவானி லோ செல்சோ குழுவின் இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.