வாழ்வா சாவா ஆட்டத்தில் இங்கிலாந்து

வாழ்வா சாவா ஆட்டத்தில் இங்கிலாந்து

2 mins read

பர்மிங்ஹேம்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முக்கியமான லீக் ஆட்டங்களில் ஒன்றாக இன்று போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.

இப்போட்டியில் இந்தியா இதுவரை தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறது. அந்த அணி மட்டுமே இதுவரை நடப்பு உலகக் கிண்ணத்தில் தோல்வியைத் தழுவாத அணியாக வலம் வருகிறது. அந்த அணி இதுவரை விளையாடிய ஆறு ஆட்டங்களில் ஐந்தில் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது (நேற்றைய ஆட்டங்களுக்கு முந்தைய நிலவரப்படி). நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப் பட்டது.

ஏற்கெனவே ஆஸ்திரேலியா முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில் இந்தியாவுக்கு மீதமிருக்கும் மூன்று ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால் போதுமானது என்ற நிலை உள்ளதால் இந்தியா தகுதி பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இன்றைய ஆட்டம் இங்கிலாந்துக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக கருதப்படுகிறது. இதில் தோல்வி அடைந்தால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பைப் பெறுவதில் சிக்கல் நீடிக்கும். அப்படி இங்கிலாந்து தோற்றால் அது பாகிஸ் தான், பங்ளாதேஷ் அணிகளுக்கு வாய்ப்பாக அமையும்.

இந்நிலையில், இங்கிலாந்து, இந்தியா மோதும் ஆட்டம் மிக்க ஆரவாரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே ஆட்டத்தை வெல்லும் நோக்கில் உள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. இருப்பினும் இந்திய அணியின் பந்தடிப்பில் சில தடுமாற்றங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன.‌ ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இதற்கிடையே, இன்று இந்திய அணியில் ஆடும் பதினொருவரில் மாற்றம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.