லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ் தானுக்கு எதிரான போட்டியில் 'த்ரில்' வெற்றியை பெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ள பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில் பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ஓட்டங்களை எடுத்தது.
தென்னாப்பிரிக்கா, நியூ சிலாந்து அணிகளை எளிதாக வென்ற பாகிஸ்தானுக்கு 228 ஓட்டங்கள் தொடக்கத்தில் சுலபமாகத் தோன்றியது.
அதனால் அந்த அணி வீரர்கள் தொடக்கத்தில் மெத்தனமாக விளையாடினர்.
ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தலைகீழாக மாறியது. ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் சுழற்பந்து வீச்சில் பாகிஸ்தானின் தொடக்க மற்றும் நடுத்தர வரிசை பந்தடிப்பாளர்கள் சீரான இடைவெளியில் வெளியேறிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியின் விளிம்புக்கே சென்றுவிட்டது.
அந்த அணி வெற்றிபெற ஆட்டத்தின் கடைசி ஐந்து ஓவர்களில் 48 ஓட்டங்கள் தேவை.
இந்நிலையில் குல்பதீன் நபி வீசிய 46வது ஓவரில் இமாத் வாசிம்-சதாப் கான் கூட்டணி 18 ஓட்டங்களை விளாச, ஆட்டம் ஒருவழியாக பாகிஸ்தான் வசம் மீண்டது.
கடைசி ஓவரில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே 7 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களை எடுத்து வென்றது பாகிஸ்தான்.
3 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் ஆப்கானிஸ்தானை வெற்றிகொண்டதுடன் 9 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறி, அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக இமாத் வாசிம் 49 ஓட்டங்களும், பாபர் ஆசம் 45 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

