சுவாரெஸ் தவற்றினால் வெளியேறியது உருகுவே

சுவாரெஸ் தவற்றினால் வெளியேறியது உருகுவே

2 mins read

சல்வடார் (பிரேசில்): கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டிகளின் தலைசிறந்த அணிகளுள் ஒன்றான உருகுவே காலிறுதியோடு வெளியேறிவிட்டது.

நட்சத்திர ஆட்டக்காரரான லூவிஸ் சுவாரெஸ் தவறவிட்ட பெனால்டி சூட்அவுட் கோலைத் தொடர்ந்து பெரு அணி 5-4 பெனால்டிகளால் வாகை சூடியது. 15 முறைக்கு மேல் கோப்பா அமெரிக்கா காற்பந்து வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச்சென்ற உருகுவே இதனால் அதிர்ச்சியில் நிலைகுலைந்தது.

பிரேசிலின் சல்வடாரில் நேற்று பின்னிரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஆரம்பம் முதலே உருகுவே ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் அந்த அணியின் ஜார்ஜியன் டி அரஸ்கேடா, எடிசன் கவானி, லூவிஸ் சுவாரெஸ் ஆகியோரின் கோல்கள் நடுவரால் மறுக்கப்பட்டன.

காணொளி மூலம் ஆட்டத்தைக் கணித்த நடுவர் அந்த மூன்று கோல்களையும் ஏற்காததால் 90 நிமிட முடிவில் 0-0 என ஆட்டம் சமநிலையை எட்டியது.

அதனால் முடிவை தீர்மா னிக்கும் பெனால்டி வாய்ப்பைப் பெற்ற சுவாரெஸ் வலையை நோக்கி பந்தை உதைத்தபோது அது பெருவின் கோல்காப்பாளர் பெட்ரோ கோலஸின் மார்பில் பட்டு வெளியேறியது. அதேநேரம் எடிசன் பிளோரஸ் உதைத்த பந்து கோல் ஆனதைத் தொடர்ந்து ஆட்டத்தை வென்று அரை இறுதிக்குள் அடி எடுத்து வைத்துள்ளது பெரு.

அரை இறுதியில் அண்டை நாடான சிலியுடன் அது மோத உள்ளது. மற்றோர் அரை இறுதியில் அர்ஜென்டினாவைச் சந்திக்கிறது போட்டியை ஏற்று நடத்தும் பிரேசில்.

இதனால், இம்முறை கோப்பா அமெரிக்கா தொடரின் மூன்று காலிறுதிப் போட்டிகள் கோலின்றி பெனால்டி சூட்அவுட் முறையில் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் பராகுவேயை பிரேசிலும் கொலம்பியாவை சிலியும் 'ஸ்பாட் கிக்' மூலம் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின் காலிறுதியில் சமநிலையில் ஆட்டம் முடிந்தபோதிலும் கூடுதல் நேரம் வழங்கப்படவில்லை. ஆனால் அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கோலாக்க இய லாமற்போனதற்காக ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் உருகுவே தற்காப்பு ஆட்டக்காரர் டியேகோ கோடின். "ஒரு கோலை தவற விட்டோம். அதற்குப் பின்னர் கிடைத்த வாய்ப்புகளின் மூலம் ஒரே ஒரு கோல் போட்டிருந்தால் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறி இருக்கும்," என்றார் அவர்.

கோப்பா அமெரிக்கா வெற்றி யாளராக 2011ஆம் ஆண்டு வரை தன்னிகரில்லா அணியாக நடைபோட்டு வந்த உருகுவே, கடந்த மூன்று பருவங்களில் சறுக்கியது.