இந்திய அணிக்கு முதல் தோல்வி

இந்திய அணிக்கு முதல் தோல்வி

2 mins read
c21bd582-b739-4e15-ab21-040cfbfa8b9b
பர்மிங்ஹம்மில் நேற்று முன்தினம் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் இந்தியாவை இங்கிலாந்து 31 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் இந்திய அணியின் கேதார் ஜாதவுடன் கைகுலுக்குகிறார். படம் ஏஎஃப்பி -

பர்மிங்ஹம்: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் பர்மிங்ஹமில் நடை­பெற்ற 38வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. பூவா தலையாவில் வென்ற இங்கி­லாந்து அணித் தலைவர் ஆய்ன் மோர்கன் பந்த­டிப்பைத் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். ஜேசன் ராய் 66 ஓட்டங்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 'கேட்ச்' கொடுத்து ஆட்ட­ மிழந்தார். மறுமுனையில் அதி­ரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 109 பந்துகளில் 111 ஓட்டங்கள் எடுத்து முகம்மது ஷமி பந்தில் வெளியேறினார்.

அடுத்து வந்த அணித் தலைவர் ஆய்ன் மோர்கன் ஓர் ஓட்டத்திலும் ஜோ ரூட் 44 ஓட்டங்களிலும் ஜோஸ் பட்லர் 20 ஓட்டங்களிலும் வோக்ஸ் ஏழு ஓட்டங்­­களிலும் வெளி­யேறினர். அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 54 பந்துகளில் 79 ஓட்டங்கள் விளாசினார். இறுதி­யில், 50 ஒவர்கள் முடி­வில் இங்கிலாந்து அணி 7 விக்­கெட்டுகளை இழந்து 337 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகம்மது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 338 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

பின்னர் ரோகித் சர்மாவுடன் இணைந்த அணித் தலைவர் விராத் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

விராத் கோஹ்லி 66 ஓட்டங்களில் பிளங்கெட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 102 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சின்போது விக்கெட் காப்பாளரிடம் 'கேட்ச்' கொடுத்து வெளியேறினார். அவரை அடுத்து களமிறங்கிய ரிஷப் பன்ட் 32 ஓட்டங்களில் வெளியேறினார்.

பின்னர் டோனியுடன் இணைசேர்ந்த ஹார்திக் பாண்டியா சிறப்­ பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹார்திக் பாண்டியா 45 ஓட்டங்­களில் ஆட்டமிழந்தார்.

டோனி 42 ஓட்டங்களுடனும் கேதார் ஜாதவ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். ஆனால் இறுதியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் இழந்து 306 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது.

இதனால் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் பிளங்கெட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.