சாதனையின் மறுபெயர் சர்மா

சாதனையின் மறுபெயர் சர்மா

2 mins read

பர்மிங்ஹம்: பங்ளாதேஷை எதிர்த்து ஆடிய போட்டியில் இந்திய பந்தடிப்பாளர் ரோகித் சர்மா (படம்) 5 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் அரங்கில் 230 சிக்சர் அடித்து, அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் 4வது இடத்திற்கு அவர் முன்னேறினார். டோனியின் 228 சிக்சர் சாதனையை அவர் முறியடித்து உள்ளார்.

அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷாகித்

அஃப்ரிடி (351) முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் கிறிஸ் கெயில் (326), 3வது இடத்தில் சனத் ஜெயசூரிய (270) உள்ளனர். 4வது இடத்தில் ரோகித் சர்மா (230), 5வது இடத்தில் டோனி (228) உள்ளனர்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான சதத்தின் மூலம், நடப்பு உலகக் கிண்ணத்தில் 500 ஓட்டங்களை ரோகித் கடந்தார். இதன்மூலம் ஒரு உலகக் கிண்ணத்தில் 500 ஓட்டங்களுக்கு மேல் அடித்த 2வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 1996 மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின்போது 500 ஓட்டங்களை கடந்து இருந்தார்.

44 ஆண்டு கால உலகக் கிண்ண வரலாற்றில் மொத்தத்தில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்களுடன் (44 இன்னிங்ஸ்) முதலிடம் வகிக்கிறார்.

இலங்கையின் குமார் சங்ககாரா, ஆஸ்ரேலியாவின் ரிக்கி பாண்டிங், ரோகித் (2015 உலகக் கிண்ணத்தில் ஒரு சதம் அடித்திருந்தார்) ஆகியோர் தலா 5 சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

அத்துடன், நேற்று முன்தினம் ரோகித் ஒருநாள் போட்டிகளில் தமது 26வது சதத்தைப் பதிவு செய்தார். சதப் பட்டியலில் ரோகித் இப்போது 6வது இடத்தில் உள்ளார். முதல் ஐந்து இடங்களில் சச்சின் டெண்டுல்கர் (49 சதம்), விராத் கோஹ்லி (41), ரிக்கி பாண்டிங் (30), சனத் ஜெயசூரிய (28), ஹசிம் ஆம்லா (27) ஆகியோர் உள்ளனர்.