மினாஸ் கிரைஸ்: கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியின் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரேசில் வாகை சூடியது.
நேற்று முன்திம் நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றியைப் பறிகொடுத்ததன் மூலம் அர்ஜெண்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி, அனைத்துலக ஆட்டங்களில் மூன்று இறுதிப் போட்டி
களில் ஆடியும் தமது தேசிய அணிக்காக ஒருமுறைகூட கிண்ணம் வென்று தரமுடியாமல் ஏமாற்றமளித்து வருகிறார்.
இதுவரை தமது சொந்த மண்ணில் நடைபெற்ற எல்லா கோப்பா அமெரிக்கா கிண்ணத்தையும் வென்றிருக்கும் பிரேசில் இப்போதும் அந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துள்ளது.
ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் ஃபர்மினோ தாழ்வாகக் கடத்திய பந்தை பெற்ற ஜெசுஸ் முதல் கோலைப் புகுத்தினார். எனினும் பாதி நேரத்தில் மெஸ்ஸி உதைத்த 'ஃபிரீ கிக்'கை செர்ஜியோ அகுவேரோ தலையால் முட்டியபோது அர்ஜெண்டினாவுக்கு கோல் புகுத்தும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் அந்தப் பந்தை பிரேசில் கோல்காப்பாளர் அலிசன் வெளியே தட்டிவிட்டார்.
பிரேசில் அணி முன்னிலை பெற்று இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமான நிலையில் அர்ஜெண்டினா வேகம் காட்டியது. முதல் பாதியைக் காட்டிலும் அதிக விறுவிறுப்பை அந்த அணியினர் வெளிப்படுத்தினர்.
66ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கடத்திச் சென்ற பந்தை அலிசன் மீண்டும் சிறப்பாக தடுத்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட பிரேசில் ஆட்டக்காரர்கள் பந்தை தங்களின் கட்டுப்பாட்டிலேயே கடத்திச் சென்றனர். அதன் பயனாக 71ஆவது நிடத்தில் ஃபர்மினோ மூலம் அந்த அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது.
அதன் பின்னர் ஆட்டம் முழுவதும் பிரேசில் வசமே இருந்தது. இந்த ஆட்டத்தை கிட்டத்தட்ட 52,000 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

