லண்டன்: முன்னணி இங்கிலிஷ் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான செல்சியின் புதிய நிர்வாகியாக அக்குழுவின் முன்னாள் வீரர் ஃபிராங்க் லாம்பார்ட், 41 (படம்), நியமிக்கப் பட்டுள்ளார். மத்தியத் திடல் ஆட்டக்காரராக 2001 முதல் 2014ஆம் ஆண்டு வரை செல்சிக்காக விளையாடினார் லாம்பார்ட். அதன்பின் மான்செஸ்டர் சிட்டிக்காகவும் நியூயார்க் சிட்டிக்காகவும் விளையாடிய இவர், கடைசியாக 14 மாதங்களுக்கு டார்பி கவுன்டியின் நிர்வாகியாகச் செயல்பட்டார்.
செல்சிக்காக அதிக கோல்களை (149) அடித்த பெருமைக்குச் சொந்தக்காரரான இவர், அக்குழுவின் நிர்வாகியாக இருப்பதே ஆகப் பெரிய சவால் எனக் குறிப்பிட்டார்.
"செல்சி குழு சாதிக்க வேண்டும் என அதன் ரசிகர்கள் விரும்புவதை நான் அறிவேன். செல்சியில் நான் பல அற்புதமான நிர்வாகிகளின்கீழ் விளையாடியிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு வெகுவாகக் கை கொடுக்கும். இந்தக் குழுவை நான் நன்றாக அறிவேன் என்பதால் எனது அணுகுமுறை நல்ல பலன்களைத் தரும் என நம்புகிறேன். ஆனாலும் அதை நான் நிரூபித்தாக வேண்டும்," என்றார் லாம்பார்ட்.
இன்னொரு முன்னாள் செல்சி ஆட்டக் காரரான ஜோடி மோரிசும் டார்பியிலிருந்து விலகி, லாம்பார்டுடன் செல்சியில் இணைந் துள்ளார். முன்னாள் செல்சி கோல்காப்பாள ரான பீட்டர் செக் அக்குழுவின் தொழில் நுட்ப, செயல்திறன் ஆலோசகராக நியமிக் கப்பட்டுள்ளார். டிரோக்பா, மேக்கலீலே ஆகிய முன்னாள் வீரர்களும் செல்சிக்குத் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

