மரக்கானா: கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியில் நாளை அதிகாலை நடைபெறும் இறுதிச் சுற்று ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் பலம்வாய்ந்த பிரேசிலும் இறுதிச் சுற்றுவரை செல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படாத பெருவும் மோதுகின்றன.
இப்போட்டியின் முதல் அரைஇறுதி ஆட்டத்தில், காற்பந்து விளையாட்டில் உலகின் மிகச் சிறந்த நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் நாடுகளாகவும் பரம வைரிகளாகவும் பார்க்கப்படும் பிரேசில், அர்ஜெண்டினா மோதின. அந்த ஆட்டத்தில் பிரேசில் 2=0 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான சிலி குழுவை 3-=0 எனும் கோல் கணக்கில் பெரு வீழ்த்தியது. இப்போட்டியில் 44 ஆண்டுகளுக் குப் பிறகு முதன்முறையாக பெரு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று உள்ளது.
நடப்பு போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் 5-0 எனும் கோல் எண்ணிக்கையில் பிரேசிலிடம் படுமோசமாக தோல்வியடைந்த பெரு, அதன்பிறகு மறுமலர்ச்சி கண்டது. தனக்குக் கிடைத்த தோல்விக்கு இறுதி ஆட்டத்தில் பழிதீர்க்க பெரு முனையும் என எதிர்பார்க்கலாம்.
லீக் ஆட்டத்தில் பிரேசிலிடம் பெரு படுதோல்வி அடைந்ததற்கு காரணமாகத் திகழ்ந்த அதன் கோல்காப்பாளர், அரையிறுதியில் சிலி உடனான ஆட்டத்தில் நாயகனாக விளங்கினார். சிலியின் கோல் வேட்டைகளை அவர் முறியடித்தார். எனவே, இறுதி ஆட்டத் திலும் அவர் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க் கப்படுகிறது.
எனினும், சிறந்த நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் பிரேசில் 2007ஆம் ஆண்டிற்கு பிறகு கிண்ணத்தை முதன்முறையாக ஏந்தும் என காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதே வேளையில், சொந்த மண்ணில் விளையாடும் பிரேசில், கடைசிக்கட்டத்தில் சறுக்குவதை நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
பிரெஞ்சு காற்பந்து லீக்கில் பிஎஸ்ஜி குழுவிற்கு விளையாடிவரும் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் இல்லாவிடினும் பிரேசில் வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. காயத்தின் காரணமாக கோப்பா அமெரிக்கா போட்டியில் நெய்மார் பங்கேற்க வில்லை.
பிரேசில் வீரர்கள் ரொபெர்ட்டோ ஃபர்மினோ, கேப்ரியல் ஜேசுஸ் இருவரும் தாக்குதலில் கூர்மையாக உள்ளனர். அர்ஜெண்டினா விற்கு எதிரான ஆட்டத்தில் இவ்விருவரும் ஆளுக்கு ஒரு கோலைப் புகுத்தினர். எனவே, இறுதிச் சுற்றில் பெருவின் தற்காப்புக்கு ஃபர்மினோ, ஜேசுஸ் இணை மிரட்டல் விடுக்கும் என எதிர்பார்க் கலாம்.
அத்துடன், தற்காப்பிலும் பிரேசில் வலுவாக உள்ளது. இந்தத் தொடரில் இதுவரை அக்குழு தனக்கெதிராக ஒரு முறைகூட கோலடிக்க விட வில்லை. குறிப்பாக, தற்காப்பு ஆட்டக்காரர் டேனி ஆல்வெஸுக்கு 36 வயதானாலும் 28 வயது மதிக்கத்தக்க இளம் வீரருக்குள்ள அதே சுறுசுறுப்புடனும் உத்வேகத் துடனும் விளையாடி வருவதைக் காண முடிகிறது.
இந்நிலையில், பெருவின் காற்பந்து வரலாற்றிலேயே இப்போது அக்குழுவிற்குச் சிறந்த காலமாக உள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்ற பெரு, இம்முறை கோப்பா அமெரிக்கா போட்டியின் இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளதை அதன் வீரர்கள் மெத்தனமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
எனவே, அந்நிய மண்ணில் விளையாடும் பெரு, இப்போட்டியில் வென்றால் பிரேசிலுக்கு அதைவிட பேரதிர்ச்சி எதுவும் இருக்க முடியாது.

