ரியோ டி ஜெனிரோ: இறுதிப் போட்டியின் கடைசி 20 நிமிட ஆட்டத்தைப் பத்துப் பேரை மட்டும் கொண்டு விளையாடத் தள்ளப் பட்டபோதும் சொந்த மண்ணில் கோப்பா அமெரிக்கா கிண்ணத் தைக் கைப்பற்றி சாதித்தது பிரேசில் காற்பந்துக் குழு.
புகழ்பெற்ற மரக்கானா விளையாட்டரங்கில் நடந்த இறுதி ஆட்டத்தில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் எவர்ட்டன் அடித்த கோலால் பிரேசில் முன்னிலை பெற்றபோதும் முற்பாதியிலேயே பதில் கோலடித்து அதனை ஈடுகட்டினார் பெரு அணித்தலைவர் பாவ்லோ குரேரோ. 44வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்தி கோலடித்தார்.
ஆயினும், பிரேசில் முன்னி லையுடனேயே இடைவேளைக்குச் சென்றது. இடைநிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தில் கோலடித்து பிரேசிலின் நாயகனாக உருவெ டுத்தார் இளம் ஆட்டக்காரர் கேப்ரியல் ஜேசுஸ். அதே நேரத்தில், 70வது நிமிடத்தில் இரண்டாம் முறையாக மஞ்சள் அட்டை பெற்று, திடலைவிட்டு வெளியேற்றப்பட்ட தால் அவரே அணியின் எமனாக மாறக்கூடும் என அஞ்சப்பட்டது.
இருப்பினும் தற்காப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, எதிரணியினரை கோல்போட விடாமல் பிரேசில் ஆட்டக்காரர்கள் தடுத்தனர். மாற்று வீரராக வந்த ரிச்சர்லிசன், 90வது நிமிடத்தில் கிட்டிய பெனால்டி வாய்ப்பின்மூலம் மேலும் ஒரு கோலை அடித்து, பிரேசில் கிண் ணம் வெல்வதை உறுதிசெய்தார்.
இதுவரை ஐந்து முறை கோப்பா அமெரிக்கா கிண்ணப் போட்டி களை ஏற்று நடத்தியுள்ள பிரேசில் அந்த ஐந்து முறையும் கிண்ணம் வென்றுள்ளது. 2007ஆம் ஆண்டிற்குப் பின் முதல்முறையாகவும் ஒட்டுமொத்தத்தில் ஒன்பது முறையாகவும் கோப்பா அமெரிக்கா கிண்ணம் பிரேசில் வசமானது.

