மான்செஸ்டர்: இருமுறை உலகக் கிண்ணம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, லீக் சுற்றில் செலுத்திய ஆதிக்கத்தை இன்று நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் தொடர்ந்து, இறுதிச் சுற்று வாய்ப்பை உறுதிசெய்யும் நம்பிக்கையுடன் இருக்கிறது. பந்தடிப்பிலும் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் எட்டில் ஏழு ஆட்டங்களில் வென்று, இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதே நேரத் தில், நடுவரிசை பந்தடிப்பாளர்களின் ஏமாற்றமளித்து வருவது கவலைக்குரிய அம்சம். குறிப்பாக நான்காமிடப் புதிருக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை.
இருந்தபோதும், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளுக்கு எதிராகத் தான் ஆடிய கடைசி மூன்று ஆட்டங்களிலும் தோற்ற தால் சற்றே மனம் தளர்ந்துள்ள நியூசிலாந்து அணியை இந்திய அணி எளிதாக வென்றுவிடும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 2015 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறி, ஆஸ்திரேலியாவிடம் கிண்ணத்தை இழந்த நியூசிலாந்து அணி இம்முறையும் இறுதிக்குத் தகுதிபெற இந்திய அணி பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் சுற்று ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அதே வேளையில், உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்குவதற்குமுன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து, இந்திய அணியை வீழ்த்தி இருந்ததால் அரையிறுதியிலும் அதை நிகழ்த்திக் காட்டும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
டிரென்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன் என்ற திறமையான, விக்கெட் வீழ்த்தவல்ல பந்துவீச்சா ளர்களை அந்த அணி கொண்டு இருந்தாலும் பந்தடிப்பில் உச்சத் திறனுடன் காணப்படும் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி ஆகிய இருவரை அவர்கள் சமாளித்தாக வேண்டும்.
ஒரே உலகக் கிண்ணத் தொட ரில் ஐந்து சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் புரிந்த ரோகித் இன்றும் தமது ஓட்ட வேட்டையைத் தொடருவார் என்பது இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு. இலங்கை அணிக்கெதிரான போட்டியில் லோகேஷ் ராகுல் சதமடித்ததும் இந்திய அணியின் பந்தடிப்பு வலி மையைக் கூட்டியுள்ளது.
அதேபோல், எந்தத் தருணத்திலும் எதிரணி பந்தடிப்பாளர்களைத் தடுமாற வைக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இந்தியப் பந்துவீச்சின் தூணாகத் திகழ்ந்து வருகிறார்.
கடந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற ரவீந்திர ஜடேஜா மெச்சும்படியாகப் பந்துவீசியதால் இன்றைய போட்டிக்குப் பொருத்த மான பதினொருவரைத் தேர்வு செய்வது என்பது இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு சவால்மிக்கதாகவே இருக்கும்.
மாறாக, புள்ளிப் பட்டியலில் நான்காமிடம் பிடித்து, ஓட்ட விகித அடிப்படையில் அரையிறுதி வாய்ப் பைப் பெற்ற நியூசிலாந்து அணி யில் பந்தடிப்பு பலவீனமாகக் காட்சியளிக்கிறது.
அணித்தலைவர் கேன் வில்லி யம்சனைத் தவிர்த்து வேறு எவரும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இத்தகைய சூழ்நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளித்து தொடக்கத்திலேயே அதிக ஓட்டங்களைக் குவித்தால் மட்டுமே நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு என்கிறார் அவ்வணியின் முன்னாள் தலைவர் டேனியல் வெட்டோரி.

