டென்னிஸ்: நடால், ஃபெடரர் மோதல்

டென்னிஸ்: நடால், ஃபெடரர் மோதல்

2 mins read

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ரஃபாயல் நடாலும் ரோஜர் ஃபெடரரும் மோதுகின்றனர்.

நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில் ஸ்பெயினின் முன்னணி வீரரான நடால், அமெரிக்காவின் சேம் குவெரியை எதிர்கொண்டார்.

சிறப்பாக விளையாடிய நடால் 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் குவெரியை வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இன்னோர் காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீரரான ஃபெடரர், ஜப்பானின் கெய் நிஷிகோரியுடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் செட்டை கெய் நிஷிகோரி 6-4 எனக் கைப்பற்றினார்.

இதனையடுத்து மீண்டெழுந்த ஃபெடரர், 6-1, 6-4, 6-4 என செட்டுகளை கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இது விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், ஃபெடரரின் நூறாவது வெற்றியாகும்.

இன்று நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், ஃபெடரர், ஸ்பெயினின் முன்னணி வீரரான நடாலை எதிர்கொள்ளவிருக்கிறார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற பிரெஞ்சுப் பொது விருதுத் தொடரின் இறுதிப் போட்டியில் இருவரும் மோதிக்கொண்டதில் நடால் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிஒன்றில், ஸ்பெயினின் ரொபர்டோ பாடிஸ்டா 7-5, 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் கைடோ பெல்லாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறவுள்ள இன்னோர் அரையிறுதியில் நோவாக் ஜோகோவிச், ரொபர்டோ பாடிஸ்டாவுடன் மோதவுள்ளார்.

உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெல்ஜியத்தைச் சேர்ந்த

டேவிட் கோஃபினை 6-4, 6-0, 6-2 என நேர் செட்களில் தோற்கடித்தார்.