அகமதாபாத்: கண்டங்களுக்கு இடையிலான காற்பந்துத் தொடரில் இந்தியா இரண்டாவது தோல்வியைச் சந்தித்தது.
இந்தியாவில் நடைபெறும் இன்டர்காண்டினன்டல் கிண்ணம் எனப்படும் இப்போட்டியில் தஜிகிஸ்தான், வட கொரியா, சிரியா, இந்தியா என நான்கு அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் தஜகிஸ்தானிடம் வீழ்ந்தது.
நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்க வைக்க முடியும் என்ற நிலையில் வடகொரியாவைச் சந்தித்தது.
முதல் பாதி ஆட்டத்தில் கோட்டைவிட்ட இந்தியா பிற்பாதி ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்டாலும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
கொரியா முற்பாதியில் மூன்று கோல்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இந்திய அணி கோல் எதுவும் போடாதது தோல்விக்கு வழி வகுத்தது.
இரண்டு மாற்று ஆட்டக்காரர் களுடன் பெரும் தன்னம்பிக்கையோடு களமிறங்கியது இந்தியா.
பல கோல் போடும் வாய்ப்புகளை உருவாக்கிய இந்திய அணி, இரண்டு கோல்களைப் போட்டது.
சுனில் சேத்ரி கொடுத்த பந்தை மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கிய சங்தே கோலாக மாற்றினார். 71வது நிமிடத்தில் சுனில் சேத்ரி இன்னேர் கோல் போட்டார்.
இதற்கிடையே வட கொரியா மேலும் இரண்டு கோல்களைப் போட்டு 2-5 என இந்தியாவை வென்றது.
பிற்பாதியில் இந்திய அணியின் ஆட்டம் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் வெளிப்படுத்தியது என்றார் அவ்வணியின் பயிற்றுவிப்பாளர்.
தனது கடைசி போட்டியில் வரும் 16ம் தேதி சிரியாவை சந்திக்கிறது இந்தியா. இதில் அதிக கோல் வித்தியாசத்தில் சிரியாவை இந்தியா வீழ்த்தும் பட்சத்திலும் தஜகிஸ்தான் வட கொரியாவை வென்றாலும் மட்டுமே இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

