வில்லியம்சன்: இறுதியில் யாரும் தோற்கவில்லை

லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டம் ‘டை’யான நிலையில் சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனது. 

இதனால் இங்கிலாந்து அணிக்கு பவுண்டரிகள் அடித்த கணக்கில் வெற்றியாளர் பட்டம் வழங்கப்பட்டது.

ஐசிசி-யின் இந்த விதிமுறையை அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 

இந்த விதிமுறையால் தொடர்ச்சியாக இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.

கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியை வாழ்த்துவதைவிட நியூசிலாந்து அணிக்கு ஆறுதல் கூறுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை. வெற்றியாளருக்கு மகுடம் சூட்டப்பட்டது என நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘போட்டியின் இறுதியில் எங்களைப் பிரித்துப் பார்க்க ஏதுமில்லை.  இறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை. ஆனால் வெற்றியாளருக்கு மகுடம் சூட்டப்பட்டது. அதுதான் இங்கு நடந்தது. அனைத்துலகக் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறையைப் பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைக்காத வரை நான் பதில் அளிக்கவேண்டும் என்று நினைக்க மாட்டேன். உணர்வை வெளிப்படுத்துவது என்பது எல்லாருக்கும் இயல்புதான். இரண்டு அணிகளும் மிகவும் கடினமாகப் போராடிய பின் இப்படி ஒரு தீர்ப்புக் கிடைத்திருப்பதை ஜீரணிக்க முடியாது. “போட்டியில் வெற்றியாளர்கள் தோல்வியாளர்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 

“ஆனால், இந்தப் போட்டியில் அப்படிப் பிரிக்க வாய்ப்பே இல்லை. இரண்டும் ஒரே பக்கம்தான் இருக்கும்,’’ என்றார்.
 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்