லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதன் முதலில் உலகக் கிண்ணத்தை வென்றிருந்தாலும் அதன் அணித் தலைவர் ஆய்ன் மோர்கனுக்கு இந்த வெற்றி திருப்தி அளிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டி முடிவடைந்து ஒரு வார காலம் ஆன நிலையில், இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டி, சூப்பர் ஓவர் வரை சென்று சமன் ஆன நிலையில் பவுண்டரிகள் எண்ணிக்கையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக முடிவு செய்யப்பட்டதையடுத்து பல விமர்சனங்கள் எழுந்தன.
"இரு அணிகளும் நெருக்கமான முறையில் சவாலாக ஆடிய போட்டி இந்த மாதிரி முடிவடைந்தது, இந்த உலகக் கிண்ணத்தை இந்த முறையில் வென்றது நியாயமல்ல.
"ஆட்டத்தில் எந்த ஒரு கணத்திலும் போட்டியை இரு அணிகளும் இழக்கும் நிலை இருந்தது என்று ஒருவரும் கூற முடியாது. மிகவும் சமச்சீரான ஆட்டமாக இருந்தது.
"என்ன நடந்ததோ அப்போது நானும் இருக்கவே செய்தேன். எனக்கும் தெரியும். ஆனால் போட்டியின் முடிவில் நான் தலையிட முடியாது. கிண்ணத்தை வென்றதால் எனக்கு எதுவும் எளிதாகத் தெரியவில்லை. ஆனால் தோல்வியடைவது கடினம்.
"நாங்கள் வெற்றி பெற தகுதியானவர்களே என்று கூறுவதற்கான உறுதியான தருணம் எதையும் கூற முடியாது.
"நானும் கேன் வில்லியம்சனிடம் கடந்த 2 நாட்களாக பேசி வருகிறேன். எங்கள் இருவராலும் தெளிவானதொரு விளக்கத்தை எட்ட முடியவில்லை. என்னைப்போலவே அவரும் காரணங்களை விளக்க முடியவில்லை.
"ஆனால் இது போன்ற ஒரு நெருக்கமான போட்டி இருந்திருக்குமா என்று எனக்குத் தோன்றவில்லை," என்றார்.
இதற்கிடையே, தற்போது இருக்கும் 'ஓவர்த்ரோ' விதிமுறையை, கிரிக்கெட் விளையாட்டின் விதி முறைகளை வகுக்கும் உரிமை கொண்ட மேரிலெபோன் கிரிக்கெட் மன்றம் பரிசீலிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்தைக் கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் குப்தில் ஸ்டம்பை நோக்கி வீசினார். ஆனால், பந்து ஸ்டோக்ஸின் மட்டையில் பட்டு ஓவர்த்ரோவாகி பவுண்டரிக்குச் சென்றது. இந்த பந்துக்கு ஓட்டமெடுக்க ஓடியதையும் சேர்த்து இங்கிலாந்துக்கு 6 ஓட்டங்கள் வழங்கப்பட்டதைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

