மட்ரிட்: ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவின் நட்சத்திர வீரர் கேரத் பேல் (படம்) விரைவில் வேறு குழுவிற்குச் செல்லவுள்ளார் என்று கூறியுள்ளார் அதன் நிர்வாகி ஸிடான்.
அமெரிக்காவில் நடைபெற்ற பருவத்திற்கு முந்திய அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் பயர்ன் மியூனிக்கிடம் 3-1 என ரியால் மட்ரிட் தோற்றது.
கேரத் பேல் பங்கேற்காத இந்த ஆட்டத்திற்குப் பிறகு பேசிய ஸிடான், "கேரத் விரைவில் குழுவில் இருந்து வெளியேறிவிடுவார் என்று நம்புகிறோம். அதுதான் அனைவருக்கும் நல்லது. நான் தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக இல்லை.
"அவர் வேறு குழுவிற்குச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளபட்டு வருகின்றன," என்றார்.
2013ல் அப்போதைய ஆக அதிக விலையான 83 மில்லியன் பவுண்டுக்கு டோட்டன்ஹம் குழுவிடம் இருந்து பேலை வாங்கியது ரியால்.
ரியால் குழுவுடனான ஒப்பந்தம் முடிவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் குழு மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேல் மீண்டும் டோட்டன்ஹம் குழுவிற்கோ, மேன்யூ அல்லது பயர்ன் குழுவிற்கோ செல்லக்கூடும் என்ற யூகங்கள் நிலவுகின்றன.

