நான்ஜிங்: சீனாவின் நான்ஜிங் நகரில் இத்தாலியின் யுவென்டசும் இன்டர் மிலானும் அனைத்துலக வெற்றியாளர் காற்பந்துக் கிண்ணப் போட்டியின் ஒரு பகுதியாக நட்புமுறை ஆட்டத்தில் மோதின.
இதில் இரு குழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டதால் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷுட்அவுட் நடத்தப்பட்டது. சக்கைப்போடு போட்ட யுவென்டஸ் கோல்காப்பாளர் புஃபான் தமது குழுவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். 4-3 எனும் கோல் கணக்கில் யுவென்டஸ் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் யுவென்டசுக்காக முதல்முறையாகக் களமிறங்கினார் மெத்திஜ்ஸ் டி லைட். அயெக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவிலிருந்து அவர் கடந்த வாரம்தான் யுவென்டசில் இணைந்தார். ஆனால் ஹாலந்தைச் சேரந்த 19வயது டி லைட் 10வது நிமிடத்தில் சொந்த கோல் போட்டார். பந்து அவரது முழங்கால் மீது பட்டு வலைக்குள் புகுந்ததில் இன்டர் முன்னிலை பெற்றது.
நட்புமுறை ஆட்டம் என்றபோதிலும் இருதரப்பு வீரர்களும் மூர்க்கமாக விளையாடினர். பலவேளைகளில் ஆட்டக்காரர்களுக்கு இடையே தகராறு, வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக பிற்பாதி ஆட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முற்றிவிடும் என்ற அச்சம் நிலவியது. அண்டோனியோ கோன்டேயின் இன்டர், யுவென்டஸ் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குத் துளியளவும் கருணை காட்டவில்லை.
ரொனால்டோவிடம் பந்து சென்றபோதெல்லாம் அதை அவரிடமிருந்து பறிக்க இன்டரின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் மூர்க்கத்தனமாகப் பாய்ந்தனர். இதன் விளைவாக ரொனால்டோவுக்குக் காயம் ஏற்படும் ஆபதது இருந்தும் துணிந்து விளையாடிய ரொனால்டோ கோல் போட்டார். பிற்பாதி ஆட்டத்தின் யுவென்டசுக்கு 'ஃப்ரீகிக்' வாய்ப்பு கிடைத்தது.
அதை எடுத்த ரொனால்டோ பந்தை வலைக்குள் அனுப்பினார். 'பெனால்டி ஷுட்அவுட்'டில் யுவென்டசின் கையோங்கியது. இதற்கிடையே, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நட்புமுறை ஆட்டங்களில் விளையாடி வரும் லிவர்பூல், அதன் கடைசி ஆட்டத்தில் போர்ச்சுகலின் ஸ்போர்டின் லிஸ்பனைச் சந்தித்தது.
இந்த ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஐரோப்பிய வெற்றியாளர் பட்டத்தை வென்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட லிவர்பூல் ஓர் ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லிஸ்பனுக்கு எதிராக வைனால்டமும் ஒரிகியும் கோல்களைப் போட்டனர்.
லிவர்பூலின் ரொபேர்ட்டோ ஃபிர்மினோ, முகம்மது சாலா, சாடியோ மானே ஆகியோர் இந்த ஆட்டத்தில் களமிறங்கவில்லை. அவர்கள் மூவரும் கோப்பா அமெரிக்கா, ஆப்பரிக்கக் கிண்ணப் போட்டி போன்ற போட்டிகளில் பங்கேற்று ஓய்வு எடுத்து வருகின்றனர். லிவர்பூல் அடுத்ததாக எடின்பரோவில் இத்தாலியின் நேப்போலியைச் சந்திக்கும்.

