புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர், பந்தடிப்புப் பயிற்றுவிப்பாளர், பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் ஆகியோரின் பதவிக்காலம் அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணப் போட்டியுடன் முடிவடைந்தது. உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்க இருப்பதால் மூன்று பேரின் பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டி முடிந்தவுடன் மூன்று பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று தெரிவித்த பிசிசிஐ, இதற்கான விண்ணப்பத்தை அதிகார்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டது.
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தலைசிறந்த பந்தடிப்பாளருமான ஜெயவர்தனே தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்தது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் களக்காப்புப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. விண்ணப்பத்துக்கான கடைசி நாள் ஜூலை 30ஆம் தேதி ஆகும். ஜான்டி ரோட்ஸ் 2017ஆம் ஆண்டு வரை ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் களக்காப்புப் பயிற்றுவிப்பாளராக இருந்துள்ளார்.

