ஒரே வாரத்தில் இரண்டாவது குத்துச்சண்டை வீரர் மரணம்

ஒரே வாரத்தில் இரண்டாவது குத்துச்சண்டை வீரர் மரணம்

1 mins read

பியூனஸ் அய்ரஸ்: போட்டியின்போது காயமடைந்த அர்ஜெண்டினா குத்துச்சண்டை வீரர் ஹியூகோ சேன்டிலன் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அர்ஜெண்டினாவின் சான் நிக்கலஸ் நகரில் கடந்த சனிக்கிழமை நடந்த குத்துச்சண்டை போட்டியில் உருகுவே நாட்டின் எடுவர்டோ அப்ரூவுடன் மோதினார் 23 வயதான சேன்டிலன். மொத்தம் பத்துச் சுற்றுகளாக அந்தப் போட்டி நடந்தது.

போட்டி முடிந்தபின் நடுவர் வெற்றியாளரை அறிவித்த நேரத்தில் நிலைகுலைந்து விழுந்தார் சேன்டிலன். இதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவரது மூளையில் வீக்கம் ஏற்பட்டிருந்ததை அடுத்து, அழுத்தத்தைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆயினும், பின்னர் அவர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்துவிட்டார் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

இதற்கு இரண்டு நாள்கள் முன்னதாகத்தான் ரஷ்ய குத்துச்சண்டை வீரரான மேக்சிம் டடாஷேவ், 28, மரணமடைந்தார். அமெரிக்காவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் அவர், புவெர்ட்டோ ரிக்கோவின் சப்ரியல் மத்தியாசுடன் மோதினார். போட்டியின்போது டடாஷேவுக்கு மூளையில் காயமேற்பட்டது.