குவாங்ஜு: தென்கொரியாவில் நடந்துவரும் ஃபினா உலக நீச்சல் வெற்றியாளர் போட்டிகளில் சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங் நூறு மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினார்.
தகுதிச் சுற்றில் 100 மீ. தூரத்தை 52.93 வினாடிகளில் ஸ்கூலிங் நீந்திக் கடந்து, எட்டாவதாக வந்தார். ஒட்டுமொத்தப் பட்டியலில் 24வது இடத்தையே இவர் பிடிக்க முடிந்ததால் அரையிறுதிச் சுற்று வாய்ப்பு எட்டாக்கனியானது.
“நான் எடுத்துக்கொண்ட நேரம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இருந்தாலும் இந்த ஒரு செயல்பாட்டை மட்டும் நினைத்தே நான் வாழப்போவதில்லை. இந்தப் போட்டியில் இருந்தே பல சாதகமான அம்சங்களைக் நான் காண முடியும். எந்தெந்த விஷயங்களைச் சரிசெய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து, அவற்றைச் சரியாக்கி, புதிய நீச்சல் வீரராக மீண்டு வருவேன்,” என்றார் 24 வயது ஸ்கூலிங்.
ஈராண்டுகளுக்குமுன் நடந்த உலக நீச்சல் வெற்றியாளர் போட்டிகளில் 100 மீட்டர் வண்ணத்துப்பாணி நீச்சலில் ஸ்கூலிங் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
முன்னதாக நடந்த 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலிலும் ஸ்கூலிங் அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. 23.73 வினாடிகளில் பந்தய தூரத்தை நீந்திக் கடந்த இவர், பட்டியலில் 20வது இடத்தைப் பிடித்தார்.