லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
வரும் 1ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கவுள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.
இதில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் தொடருக்கு அறிமுகமாகிறார்.
ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சுக்குத் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் நடந்த உலகக் கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சரும் பந்தடிப்பில் பென் ஸ்டோக்சும் இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.
உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்பாகத்தான் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்ட ஆர்ச்சர், தனது சிறப்பான பந்துவீச்சால் உலகக் கிண்ணப் போட்டியிலும் தற்போது டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தார்.
இதற்கு முன் ஜோஸ் பட்லரிடம் இருந்த துணை அணித் தலைவர் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, பென் ஸ்டோக்ஸிடம் இந்த முறை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு லண்டன் மதுக்கூடத்தில் மது போதையில் ஸ்டோக்ஸ் ரகளையில் ஈடுபட்டதால், அவரின் துணை அணித் தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஸ்டோக்ஸுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டது.
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 92 ரன்கள் சேர்த்து அசத்திய இடதுகை சுழற்பந்துவீ்ச்சாளர் ஜாக் லீச் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. லூவிஸ் கிரகார்ரிக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதற்கிடையே, இங்கிலாந்தின் அனுபவமற்ற தொடக்கவரிசை கவலை அளிப்பதாகக் கூறியுள்ளார் அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் டிரிவோர் பேலிஸ்.
கடந்த 2012ல் ஆண்ட்ரு ஸ்ட்ருஸ் ஓய்வுபெற்ற பிறகு, அலைஸ்டர் குக்கிற்கு சிறந்த இணை யாரும் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக இங்கிலாந்தின் தொடக்க வரிசை வலுவாக இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
"ஆனாலும் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆஷஸ் தொடரை வென்றோம்.
"தொடக்கவரிசை பிரச்சினையை, ஜேசன் ராய் சரி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
"தனது முதல் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக ராய், 72 ஓட்டங்கள் குவித்தது சிறப்பான ஒன்று.
உலகக் கிண்ணப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஆஷஸ் தொடரிலும் தனது முழுத் திறனை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்," என்றார்.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் நான்காவது வீரராக களமிறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பான்கிஃராப் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளதால், அதன் முன்வரிசை மேலும் வலுவடைந்து உள்ளது.
கடந்த ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்திற்குப் பிறகு முதன்முறையாக டெஸ்ட் போட்டிக்கான அணியில் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து மைதானங்களைக் கவனத்தில் கொண்டு ஆறு பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
இதனிடையே, ஆஷஸ் தொடரை யார் வெல்வார்கள் என்று கணிப்பது கடினம் என்று கூறியுள்ளார் ஸ்டீவ் வாக்.
"ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களும் அசத்துவார்கள்.
"தொடர் முழுவதும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். தற்போது இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் அடைந்திருப்பது இரு அணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
"எனவே யார் தொடரை வெல்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இது மிகச்சிறந்த டெஸ்ட் தொடராக இருக்கப் போகிறது,'' என்றார்.

