பிஎஸ்ஜி குழுவை பெனால்டி முறையில் வென்றது இண்டர் மிலான்

பிஎஸ்ஜி குழுவை பெனால்டி முறையில் வென்றது இண்டர் மிலான்

2 mins read
d27fd34b-277d-493b-ac32-15381c00a062
பிஎஸ்ஜி குழுவின் கிலியன் இம்பாப்பே (இடது) இண்டர் மிலான் குழுவின் மார்சிலோ புரோசோவிச்சைக் கடந்து பந்தைக் கொண்டு செல்ல முயல்கிறார். படம்: ஏஎஃப்பி -

மக்காவ்: போர்ச்சுகலின் மத்திய திடல் ஆட்டக்காரர் ஜோ மரியோ பெனால்டி வாய்ப்புகளில் கடைசி வாய்ப்பை கோலாக்கி, தமது குழுவுக்கு வெற்றியைத் தேடி தந்தார்.

பிரேசிலிய நட்சத்திரமான நெய்மார் இல்லாத பாரிஸ் செயின்ட் ஜெமேன் (பிஎஸ்ஜி) குழுவை இத்தாலியின் இண்டர் மிலான் குழு 7-6 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் வென்றது.

நேற்று முன்தினம் இரவு மக்காவ் நகரில் நடைபெற்ற இந்த அனைத்துலக சூப்பர் கிண்ண ஆட்டத்தில் இரு குழுக்களும் இயல்பான ஆட்ட முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

வெற்றியாளரைத் தீர்மானிக்க கொடுக்கப்பட்ட பெனால்டி வாய்ப்புகளில் இண்டர் மிலான் 6-5 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி குழுவைத் தோற்கடித்தது.

சில நாட்களுக்கு முன் சீனாவில் நடைபெற்ற அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் இண்டர் மிலான் குழு, சக நாட்டுக் குழுவான யுவன்டஸ் குழுவிடம் பெனால்டி கோல் கணக்கில் தோற்றது.

அதன் பிறகு கிடைத்த இந்த வெற்றி அதற்குச் சற்று ஆறுதல் அளித்தது.

ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் பிஎஸ்ஜி குழுவின் திலோ கெஹ்ரே முதல் கோலைப் போட்டார். பின்னர் ஆட்டம் முடிய சில வினாடிகள் இருந்த சமயத்தில் இண்டர் குழுவின் சேமுவல் லொங்கோ தமது குழுவின் சமநிலை கோலைப் போட்டார்.

"இன்று இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம்," என்று தெரிவித்தார் பிஎஸ்ஜி குழுவின் பயிற்றுவிப்பாளர் தாமஸ் டுச்சல்.

"வெப்பநிலை எங்களுக்குச் சிரமத்தைக் கொடுத்தது. ஆட்டத்தின் இடையிடையே தண்ணீர் அருந்துவதற்கு நடுவர் சிறிய இடைவெளிகள் கொடுத்தார்," என்றும் திரு டுச்சல் தெரிவித்தார்.

"அடுத்த வாரம் பிஎஸ்ஜி ரென்னஸ் குழுவைச் சந்திக்கிறது. அந்த ஆட்டத்தில் நாங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றி பெற பாடுபடுவோம்," என்றார் டுச்சல்.

இண்டர் மிலான் குழு தற்போது பங்கேற்கும் பல்வேறு ஆட்டங்கள் எதிர்வரும் இத்தாலிய 'செரி ஆ' காற்பந்துப் பருவத்தின் கடுமையான ஆட்டங்களுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்," என்றார் இண்டர் மிலான் குழுவின் நிர்வாகியான அண்டோனியோ கொண்டே.