கொழும்பு: இலங்கை - பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் 2வது போட்டியும் கொழும்பில் நேற்று நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற பங்ளாதேஷ் பந்தடிப்பைத் தேர்வு செய்தது. விக்கெட் காப்பாளர் பந்தடிப்பாளரான முஷ்ஃபிகுர் ரஹிமைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 117 ஓட்டங்களுக்குள் பங்ளாதேஷ் 6 விக்கெட்டுக்களை இழந்தது.
ஏழாவது விக்கெட்டுக்கு ரஹிமுடன் மெஹிதி ஹசன் மிராஸ் இணைந்தார். இவர்கள் 84 ஓட்டங்கள் எடுத்தனர். ஹசான் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
முஷ்ஃபிகுர் ரஹிம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்கள் அடிக்க இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் சேர்த்தது. பின்னர் 238 ஓட்ட இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 75 பந்துகளில் 82 ஓட்டங்கள் விளாசி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். 4வது விக்கெட்டுக்கு இணைந்த குசால் மெண்டிஸ் (41), மேத்யூஸ் (52) சிறப்பாக விளையாடி 44.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனத் தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

