கோஹ்லி விசாரித்ததால் விரிசல்

கோஹ்லி விசாரித்ததால் விரிசல்

2 mins read
15b5a896-949e-46e8-b630-389e8767e843
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியுடன் மோதிய ஆட்டத்தில் விக்கெட் இழந்த இந்திய அணியின் ரோகித் சர்மாவை வழியனுப்பும் விராத் கோஹ்லி. கோப்புப்படம்: ஏஎஃப்பி -

மும்பை: கிரிக்கெட் வட்டாரத்தில் அண்மைய பரபரப்பான விராத் கோஹ்லி - ரோகித் சர்மா மோதலுக்கான காரணங்கள் தற்போது கசிந்துள்ளன.

இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, துணைத் தலைவர் ரோகித் சர்மா ஆகியோருக்கு இடையே பிரச்சினையைத் தீர்க்க, பிசிசிஐயின் தலைமை நிர்வாக அதிகாரி அமெரிக்காவுக்குச் செல்ல இருக்கிறார்.

இங்கிலாந்தில் நடந்த உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி, அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.

தோல்விக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமான போட்டியில் முன்னணி வீரர்களான ரோகித், கோஹ்லி ஆகியோர் மந்தமாக விளையாடி ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கினர் என்பதே உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது.

அணியின் தோல்வி குறித்து அணித் தலைவர் கோஹ்லி மற்றும் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியிடம், பிசிசிஐ நிர்வாகக்குழு விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் கசிந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக இது பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, அணித் தலைவர் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா இடையே பிரச்சினை வெடித்திருப்பதாகச் செய்திகள் கூறின.

விராத் கோஹ்லியின் 'இன்ஸ்டகிராம்' பக்கத்தை ரோகித் 'அன்ஃபாலோ' செய்தது இதனை உறுதியாக்கியது.

அத்துடன் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா, போலிகள் தோன்றினால் உண்மை மௌனமாகிவிடும் என்று 'ஸ்டேட்டஸ்' பதிவிட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோஹ்லிக்கும் ரோகித்துக்கும் உள்ள பிரச்சினைக்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கிக்கொள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு அனுமதி வழங்கியது.

அந்த அனுமதியை மீறும் வகையில் மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவர் உலகக் கிண்ணப் போட்டி நடந்த 7 வார காலமும் தனது மனைவியையும் பிள்ளையையும் தன்னுடன் தங்க வைத்திருந்ததாக கூறப்பட்டது. அந்த மூத்த வீரர் ரோகித் சர்மா என்ற உண்மை இப்போது தெரியவந்துள்ளது.

அனுமதி பெறாமல் தனது குடும்பத்தை ஏழு வாரங்கள் தங்க வைத்தது குறித்து சர்மாவிடம் கோஹ்லி விசாரித்ததால்தான் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் உலகக் கிண்ணத் தொடர் முடிந்து இந்திய அணி நாடு திரும்பும்போதும்கூட அனைவருடனும் சேர்ந்து செல்லாமல் ரோகித் முன்னதாக தனது மனைவி, பிள்ளையுடன் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்.