இந்திய அணியின் விளம்பரதாரராக ஓப்போவுக்குப் பதில் பைஜூஸ்

இந்திய அணியின் விளம்பரதாரராக ஓப்போவுக்குப் பதில் பைஜூஸ்

2 mins read
80e751ed-0ea7-4fca-8049-0d12f3704796
கணிதம், பௌதிகம், வேதியியல், உயிரியல் போன்ற பள்ளிப் பாடங்களை ஆசிரியரின் உதவியின்றி தாங்களாகவே கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு உதவும் செயலியான பைஜூவை உருவாக்கிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த 37 வயது பைஜூ ரவீந்திரன். படம்: ஊடகம் -

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் விளம்பரதாரராக இதுவரை ஓப்போ நிறுவனம் இருந்துவந்த நிலையில், இனி பைஜூஸ் நிறுவனம் விளம்பரதாரராக இருக்கும் என்று பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்தது.

இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்திய அணி வீரர்களின் மேலாடைகளில் ஓப்போ சின்னத்திற்குப் பதிலாக, பைஜூஸ் நிறுவனத்தின் சின்னம் இடம்பெறும். இந்திய அணியின் விளம்பரதாரராக வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்திய, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் ஆட்டத்தில் இருந்து முதல் 2022 மார்ச் 31 ஆம் தேதி வரை பைஜூஸ் நிறுவனம் நீடிக்கும்.

இதனை பிசிசிஐயின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோஹ்ரி தெரிவித்தார். இதுவரையிலும் இந்திய அணிக்கு விளம்பரதாரராக இருந்து வந்த ஓப்போ நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், புதிய விளம்பரதாரர் ஆன பைஜூவை வரவேற்பதாகக் கூறினார். இந்திய கிரிக்கெட் குழுவின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து பங்காற்றுவோம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, இந்திய அணியின் விளம்பரதாரர் உரிமையை ஓப்போ நிறுவனம் கடந்த 2017 மார்ச் மாதம் முதல் 5 ஆண்டுகளுக்குப் பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த உரிமையைப் பைஜூஸ் நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. இந்த உரிமை மாற்றமானது முத்தரப்பு (ஓப்போ-பைஜூஸ்-பிசிசிஐ) ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உரிமை மாற்றத்தால் கிரிக்கெட் வாரியத்திற்குக் கிடைக்கும் வருமானத்தில் எவ்விதப் பாதிப்பும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உரிமை மாற்றம் காரணமாக கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் 10 விழுக்காடு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக ஓப்போ நிறுவனம் விளம்பரதாரர் உரிமையை ரூ.768 கோடிக்குப் பெற்றது. அதற்கான ஒப்பந்தத்தின்படி, இருதரப்புக் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றுக்கு ரூ.4.61 கோடியும், ஐசிசி போட்டியின் ஆட்டம் ஒன்றுக்கு ரூ.1.56 கோடியும் ஓப்போ நிறுவனம் பிசிசிஐக்கு வழங்க வேண்டும்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பைஜூ ரவீந்திரன், "இந்தியர்களின் இதயத் துடிப்பான கிரிக்கெட் விளையாட்டுக்கு விளம்பதாரர் ஆனதில் பெருமை கொள்கிறோம். அதிலும் இளையர்களும் சிறுவர்களுக்கும் அளவுக்கதிகமாக நேசிக்கும் இந்திய அணியில் பைஜூவின் பங்கு என்பது உண்மையிலேயே என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

"குழந்தைகளின் வளர்ச்சியில் விளையாட்டு என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

"அதிலும் கிரிக்கெட் என்றால் அவர்களுக்குக் கொள்ளை ஆசை. இந்தியாவில் மட்டும் பில்லியன் கணக்கான சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட்டால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதே போல் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள எங்களது பைஜூ செயலியும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை," என்றார்.