ரொனால்டோ விளையாடாததால் வழக்கு தொடர ரசிகர்கள் முடிவு

ரொனால்டோ விளையாடாததால் வழக்கு தொடர ரசிகர்கள் முடிவு

2 mins read
67f7ccd6-0c8d-4273-b30d-c39067c6a4a5
பருவத்திற்கு முந்திய ஆட்டம் ஒன்றிற்காக சோல் சென்றிருந்த யுவென்டஸ் காற்பந்துக் குழுவில் இடம்பெற்றிருந்தாலும் ரொனால்டோ (நடுவில்) ஒரு நிமிடம்கூட விளையாடவில்லை. படம்: ஏஎஃப்பி -

சோல்: தென்கொரியாவில் நடைபெற்ற நட்புமுறை காற்பந்தாட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடாததால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் விளையாட்டு முகவை மீது வழக்குத் தொடரவுள்ளதாக சட்ட நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ விளையாடுவதைப் பார்ப்பதற்காக ஆர்வத்துடன் வந்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கொரிய லீக் குழு ஒன்றுக்கு எதிராக விளையாடுவதற்காக சோலுக்குச் சென்றிருந்தது ரொனால்டோ அங்கம் வகிக்கும் யுவென்டஸ் குழு.

சுமார் 65,000 காற்பந்து ரசிகர்கள் குழுமியிருந்த அந்த விளையாட்டரங்கில் ரொனால்டோ விளையாட அனுமதிக்கப்படாமல் மாற்று ஆட்டக்காரர்களுக்கான இடத்தில் அமர வைக்கப்பட்டு இருந்தார்.

கடைசி வரை அவர் களமிறங்காததால், ஒரு சிலர் ரொனால்டோவின் பரம எதிரியான அர்ஜெண்டினா வீரர் லயனல் மெஸ்ஸியின் பெயரை உச்சரித்தனர்.

இந்த ஆட்டம் பற்றிய முதல் அறிவிப்பு வெளியானபோது, 45 நிமிடங்களாவது ரொனால்டோ விளையாடுவார் என்று ஏற்பாட்டாளர்கள் கூறியதால் பலரும் இதற்கான நுழைவுச்சீட்டை வாங்க பெரும் ஆர்வம் காட்டினர் என்று கூறியது மியூன்கன் எனும் சட்ட நிறுவனம்.

இதையடுத்து, 30,000 வொன் (34 வெள்ளி), 400,000 வொன்களுக்கு (464 வெள்ளி) ஜூலை 3ஆம் தேதி விற்பனைக்கு வந்த நுழைவுச்சீட்டுகள் அடுத்த இரண்டரை மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுவரை சுமார் 2,000 பேர் குறிப்பிட்ட விளையாட்டு முகவை மீது வழக்குத் தொடுக்க தங்களை நாடியுள்ளதாக அந்தச் சட்ட நிறுவனம் கூறியது.

ரசிகர்களுக்கு சரியான இழப்பீடு கொடுக்க விளையாட்டு முகவை முன்வரவில்லையென்றால், அடுத்த வாரத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அச்சட்ட நிறுவனம் கூறியது.