மட்ரிட்: சீன காற்பந்துக் குழுவிற்கு மாறும் வாய்ப்பு தட்டிக்கழிக்கப்பட்டதையடுத்து, பருவத்திற்கு முந்திய காற்பந்து ஆட்டமொன்றில் இருந்து விலகியுள்ளார் கேரத் பேல்.
பருவத்திற்கு முந்திய ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிற்கு எதிராக விளையாடுவதற்காக மியூனிக்கிற்குப் பயணம் செய்த ரியால் மட்ரிட் குழுவில் கேரத் பேல் இடம்பெறவில்லை.
ஜியங்ஷு ஷனிங் என்ற சீன காற்பந்துக் குழுவில் இணைய கேரத் பேல் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ரியால் மட்ரிட் குழுவின் உரிமையாளர் ஃபுளோரென்டினோ பெரெஸ் அதற்குத் தடையாக இருந்தார்.
குழு மாறுவதற்கான தொகை யைக் கொடுத்தால்தான் பேலை விடுவிக்க முடியும் என்று ரியால் மட்ரிட் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, கேரத் பேல் விளையாடுவதற்கேற்ற மனநிலையில் இல்லை என்று அறியப்படுகிறது.
2013ஆம் ஆண்டில் அப்போதைய ஆக அதிக விலையாக 85 மில்லியன் பவுண்டுக்கு டோட்டன்ஹம் குழுவில் இருந்து ரியால் மட்ரிட் குழுவிற்குச் சென்றார் பேல்.
ஆனால், நிர்வாகி ஸிடானுக்கும் பேலுக்கும் ஒத்துப்போகாத நிலையில், பேல் குழு மாறப் போவதாகக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், பேல் விரைவில் வேறு குழுவிற்குச் செல்வார் என்று கடந்த வாரம் கூறிய ரியால் மட்ரிட்டின் நிர்வாகி ஸிடான், கேரத் பேல் குழுவில் இருந்து வெளியேறுவது தான் அனைவருக்கும் நல்லது என்றும் சொன்னார்.
தற்போது பேலுக்கு இருக்கும் வாய்ப்புகள் இரண்டுதான். ஒன்று குழு மாற்றுத் தொகையை தரச் சம்மதிக்கக்கூடிய இன்னொரு சீன காற்பந்துக் குழுவை நாடுவது.
இல்லையென்றால் மீண்டும் பிரிமியர் லீக் குழுவிற்கே செல்வது. ஆனால், அவருக்குச் சம்பளத்தில் சற்று சறுக்கல் ஏற்படக்கூடும்.
சீன காற்பந்துக் குழுவிற்கு மாறுவதற்கான காலக்கெடு இன்றோடு முடிவுறும் நிலையில், பேலுக்கு இரண்டாம் வழியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புதான் அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது.

