புதுடெல்லி: தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் 8 மாதங்கள் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ விதித்த தடை தனக்கு அதிர்ச்சி அளித்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் பிருத்வி ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 22, 2019ல் சையத் முஷ்டாக் அலி கிண்ணப் போட்டிகளின்போது பிருத்வி ஷாவுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டபோது, தடை செய்யப்பட்ட 'டெர்புடலின்' என்ற மருந்து இருந்துள்ளது.
பிருத்வி ஷா மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகளுக்காக இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதில் இந்த டெர்புடலின் இருந்தது.
இந்த மருந்தை அவர் கவனக்குறைவாகத் தெரியாமல் எடுத்துக் கொண்டிருக்கலாம். இது 'வாடா' அமைப்பினால் தடை செய்யப்பட்ட மருந்தாகும்.
எனவே, பிருத்வி ஷாவிற்கான தடை முன்தேதியிட்டு கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதாகவும் தடைக்காலம் நவம்பர் 15ஆம் தேதி முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தடை குறித்து இளம் வீரர் பிருத்வி ஷா கூறுகையில், "மிகவும் உண்மையுடன் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நான் ஏற்கிறேன். எல்லாம் என் தலைவிதி. பிசிசிஐ அளித்த தண்டனை என்னை உலுக்கிவிட்டது.
"கிரிக்கெட்தான் என்னுடைய வாழ்க்கை. இந்தியாவுக்காகவும் மும்பைக்காகவும் விளையாடுவதைக் காட்டிலும் மிகப்பெரிய பெருமை, கௌரவம் வேறு ஏதும் எனக்கு இல்லை.
"இந்தத் தடையில் இருந்து வெளியே வரும்போது இன்னும் வலிமையாகவும் வேகமாகவும் நான் இருப்பேன்" என்றார்.

