லண்டன்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பர்மிங்ஹாமில் ஆரம்பமாக உள்ளது.
உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் வீழ்ந்த சோகத்தில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.
கடந்த 2001ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் கிண்ணத்தை வெல்லாத ஆஸ்திரேலிய அணி, இம்முறை அதைத் தகர்த்து தொடரை வெல்ல முனைப்பு காட்டும்.
உலகக் கிண்ணத் தொடரில் மிரட்டிய வார்னர் ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளார்.
வார்னருடன் தொடக்கவீரராக பேன்கிராஃப்ட் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று கவாஜா, தொடையின் பின்பகுதி காயத்தில் இருந்து மீண்டுள்ளார்.
இவருடன் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட் என நடுவரிசை படையும் காத்திருக்கிறது.
மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், என பலம்பொருந்திய சிறந்த பந்து வீச்சாளர்களும் ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர்.
மறுபக்கம் உலகக் கிண்ணத்தை வென்ற உற்சாகத்தில் உள்ள இங்கிலாந்து அணி, கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரை இழந்தது கிடையாது என்ற ஊக்கத்தோடு உள்ளது.
அதேநேரம், சில வாரங்களுக்கு முன் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 85 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து அணி சுருண்டது சற்று அதிர்ச்சிதான்.
இந்தப் பலவீனத்தை ஆஸ்திரேலிய அணி பயன்படுத்திக் கொள்ள முயலும் என எதிர்பார்க்கலாம்.
அணித்தலைவர் ஜோ ரூட், உலகக் கிண்ணத் தொடரில் அசத்தி டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் கண்டுள்ள ஜேசன் ராய், வோக்ஸ், பேர்ஸ்டோ கூட்டணி அதிரடி காட்டும் என நம்பலாம்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சினைப் பொறுத்த வரையில், அனுபவ வீரர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் கூட்டணி மிரட்டக் காத்திருக்கிறது.
இதுவரை நடைபெற்று முடிந் துள்ள ஆஷஸ் தொடரின் வர லாற்றைப் பார்த்தால், ஆஷஸ் டெஸ்ட் தொடர் இதுவரை 70 முறை நடைபெற்றுள்ளது.
இதில் ஆஸ்திரேலிய அணி 33 முறையும் இங்கிலாந்து அணி 32 முறையும் தொடரைக் கைப்பற்றியுள்ளன.
அதேபோன்று ஐந்து தொடர்கள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

