கொழும்பு: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வென்ற இலங்கை அணி, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
கொழும்பு பிரேமதாசா விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 122 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பந்தடித்த இலங்கை அணியில் தலைவர் கருணரத்னே (46), குசல் மெண்டிஸ் (54), ஏஞ்சலோ மேத்யூஸ் (87) ஆகியோர் சிறப்பாக ஆடி ஓட்டம் குவித்தனர். பின்வரிசை ஆட்டக்காரரான தாசுன் ஷனக 14 பந்துகளில் 30 ஓட்டங்களை விளாசினார். இதையடுத்து, இலங்கை அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 294 ஓட்டங்களை எடுத்தது.
பங்ளாதேஷ் தரப்பில் ஷஃபியுல் இஸ்லாம், சௌம்ய சர்க்கார் ஆகிய இருவரும் ஆளுக்கு மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் பந்தடித்த பங்ளாதேஷ் அணியில் சர்க்கார் (69), தைஜுல் இஸ்லாம் (39*) ஆகியோரைத் தவிர மற்ற எவரும் நிலைத்து ஆடவில்லை. இதன் காரணமாக 36 ஓவர்களிலேயே அந்த அணி 172 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, தோல்வியைத் தழுவியது. ஷனக மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு பெற்றார் ஏஞ்சலோ மேத்யூஸ்.

