இவ்வாண்டுக்கான 'ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்' நெடுந்தொலைவு ஓட்டம் வழக்கத்திற்கு மாறாக மாலை வேளையில் நடைபெறும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். இதுவரை ஓட்டம் காலை வேளையில் நடைபெற்று வந்தது.
இவ்வேளையில் ஓட்டம் தொடர்பாக மேலும் பல மாற்றங்களை ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர்.
இந்த ஓட்டத்தின் 18 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, பங்கேற்பாளர்கள் ஒரே இடத்திலிருந்து ஓட்டத்தைத் தொடங்குவர். 'எஃப் 1 பிட்' வளாகத்திற்கு முன்னதாக ஓட்டம் தொடங்கும்.
முன்னதாக, சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்பாளர்கள் ஓட்டத்தைத் தொடங்கினர். உதாரணத்திற்கு, 42 கிலோ மீட்டர் போட்டியில் பங்கேற்றவர்கள் ஆர்ச்சர்ட் சாலையில் ஓட்டத்தைத் தொடங்கினர். மாறாக, 21 கிலோ மீட்டர் போட்டியின் பங்கேற்பாளர்கள் செந்தோசாவிலிருந்து ஓட்டத்தைத் தொடங்கினர்.
இவ்வாண்டு ஓட்டத்தில் பங்கேற்பாளர்கள் பிராஸ் பாசா ரோடு, நிக்கல் ஹைவே, போர் நினைவிடப் பூங்கா, மரினா குரோவ் உள்ளிட்ட இடங்களைக் கடந்து செல்வர்.
முந்தைய போட்டிகளின் ஓட்டக்காரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளைக் கொண்டு ஓட்டப் பாதையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் நேற்று தெரிவித்தனர்.
இவ்வாண்டு நவம்பர் 30ஆம் தேதி 21 கி.மீ., 42 கி.மீ. நெடுந்தொலைவு ஓட்டங்கள் மாலை 6 மணியிலிருந்து தொடங்கும். எனினும், 10 கி.மீ., 5 கி.மீ. பிரிவுகளுக்கான போட்டிகள் வழக்கம்போல காலையில் நடைபெறும். டிசம்பர் 1ஆம் தேதி 10 கி.மீ. ஓட்டம் காலை 6.30 மணிக்கும் 5 கி.மீ. ஓட்டம் காலை 8.30 மணிக்கும் தொடங்கும்.

