80 மில்லியன் பவுண்டுக்கு மெக்வாயரை ஒப்பந்தம் செய்ய மேன்யூ சம்மதம்

80 மில்லியன் பவுண்டுக்கு மெக்வாயரை ஒப்பந்தம் செய்ய மேன்யூ சம்மதம்

2 mins read
eb2402ec-7ad9-446c-83f3-4d4321427f78
லெஸ்டர் சிட்டியிடம் இருந்து தற்காப்பு ஆட்டக்காரர் ஹேரி மெக்வாயரை 80 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்ய  மான்செஸ்டர் யுனைடெட் சம்மதம் தெரிவித்துள்ளது. படம்: ஊடகம் -

மான்செஸ்டர்: லெஸ்டர் சிட்டியிடம் இருந்து தற்காப்பு ஆட்டக்காரர் ஹேரி மெக்வாயரை 80 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெட் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஆக அதிக விலை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்படும் தற்காப்பு ஆட்டக்காரர் எனும் பெருமை மெக்வாயரைச் சேரும்.

மான்செஸ்டர் யுனைடெட்டில் இணைவதற்கு முன்பு 26 வயது மெக்வாயர் இந்த வாரயிறுதியில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மான்செஸ்டர் யுனைடெட் ஏற்கெனவே கிரிஸ்டல் பேலஸிடமிருந்து ஆரன் வான் பிஸ்ஸாக்காவையும் சுவான்சியிடமிருந்து டேனியல் ஜேம்ஸையும் ஒப்பந்தம் செய்துள்ளது.

"ஹேரி மெக்வாயருக்கான விலை குறித்து மான்செஸ்டர் யுனைடெட்டும் லெஸ்டர் சிட்டியும் இணக்கம் கண்டுள்ளன.

"இருப்பினும், ஒப்பந்தம் நிறைவேற இன்னும் நிறைய வேலை இருக்கிறது," என்று லெஸ்டர் சிட்டி யின் பிரெண்டன் ரோஜர்ஸ் தெரிவித்தார்.

"ஹேரி மெக்வாயர் சிறப்பான ஆட்டக்காரர். அவரை இழக்க நாங்கள் விரும்பவில்லை. உயர்தர ஆட்டக்காரரான ஹேரி மெக்வாயர் நல்ல குணம் படைத்தவரும்கூட," என்றார் ரோஜர்ஸ்.

ஹல் சிட்டிக்கு விளையாடிய ஹேரி மெக்வாயர் 2017ஆம் ஆண்டில் டெஸ்டர் சிட்டியில் இணைந்தார்.

லெஸ்டர் சிட்டிக்காக அவர் 69 இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களில் களமிறங்கினார்.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவுடனான ஒப்பந்தம் நிறைவேறினால் உலகின் ஆக விலைமதிப்புள்ள தற்காப்பு ஆட்டக்காரராக மெக்வாயர் திகழ்வார். 2018ஆம் ஆண்டில் வெர்ஜல் வேன் டைக்கை ஒப்பந்தம் செய்ய சௌத்ஹேம்டனுக்கு லிவர்பூல் 75 மில்லியன் பவுண்டு கொடுத்தது. இந்தச் சாதனைத் தொகையை மெக்வாயரின் ஒப்பந்தம் முறியடிக்க உள்ளது.