நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு மூன்று மாதத் தடை

நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு மூன்று மாதத் தடை

2 mins read
f789931d-65b6-48e0-9331-ca95da7d2509
கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியின் மூன்றாவது இடத்தை நிர்ணயிக்கும் ஆட்டத்தின்போது சிலி வீரர் கேரி மெடெலுடன் கைகலப்பில் ஈடுபட்டார் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி (இடமிருந்து மூன்றாவது). அவர்கள் இருவருக்கும் நடுவர் சிவப்பு அட்டை காட்டி ஆட்டத்திலிருந்து வெளியேற்றினார். கிண்ணத்தை பிரேசில் வெல்ல வேண்டும் என்று ஏற்கெனவே முடிவெடிக்கப்பட்டு, அதன்படி போட்டி நடத்தப்பட்டதாக மெஸ்ஸி குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. படம்: ஏஎஃப்பி -

பியூனோஸ் ஐரிஸ்: அர்ஜெண்டினா காற்பந்துக் குழுவின் அணித் தலைவரும் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்ஸி அனைத்துலக ஆட்டங்களிலிருந்து மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்.

தென்னமெரிக்கக் காற்பந்துச் சம்மேளனம் அவருக்கு 41,121 பவுண்டு அபராதம் விதித்தது.

அண்மையில் நடந்து முடிந்த கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியை ஊழல்மிக்க போட்டி என அவர் வர்ணித்ததால் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியின் மூன்றாவது இடத்தை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் அர்ஜெண்டினாவும் சிலியும் மோதின.

இதில் அர்ஜெண்டினா 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் சிலியின் கேரி மெடெலுடன் கைகலப்பில் மெஸ்ஸி ஈடுபட்டதால் அவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆட்டத்துக்குப் பிறகு கோப்பா அமெரிக்கா போட்டியை மெஸ்ஸி கடுமையாக விமர்சித்தார்.

கிண்ணத்தை பிரேசில் வெல்ல போட்டி ஜோடிக்கப்பட்டதாகவும் அதற்கு ஏற்ப அதிகாரிகள் செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

"இந்த ஊழல்மிக்க போட்டியில் நாங்கள் பங்கெடுக்கத் தேவையில்லை. போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரை அதை ஏற்று நடத்தியோர் எங்களுக்கு உரிய மரியாதையைத் தரவில்லை.

"போட்டியில் ஊழல் நடந்தது வேதனைக்குரியது. ஆட்டத்தை ரசிக்க இந்த நடுவர்கள் விடுவதில்லை. போட்டியை அவர்கள் கொஞ்சம் கெடுத்துவிட்டனர்," என்று மெஸ்ஸி குறைகூறினார்.

கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டிக்கு மெஸ்ஸி மரியாதை கொடுக்கவில்லை என்றும் போட்டி நேர்மையில்லா வகையில் நடத்தப்பட்டதாக மெஸ்ஸி ஆதாரமில்லாமல் தெரிவித்துள்ளார் என்றும் தென்ன மெரிக்கக் காற்பந்துச் சம்மேளனம் கூறியது.

மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சிலி, மெக்சிகோ, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு எதிரான நட்புமுறை ஆட்டங்களில் அவரால் களமிறங்க முடியாது.