புதுடெல்லி: எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக விருப்பம் இருப்பதாக அவ்வணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
"ஐபிஎல், சிஏபி, தொலைக்காட்சி கிரிக்கெட் வர்ணனையாளராக நான் மேற்கொள்ளும் பணிகளை முதலில் நிறைவு செய்கிறேன். ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராவேன். இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக எனக்கு நிச்சயமாக ஆர்வம் உள்ளது.
"ஆனால் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியை இப்போது ஏற்கமாட்டேன். இன்னும் ஒரு கட்டம் போகட்டும். அப்போது பயிற்றுவிப்பாளர் களத்தில் என்னுடைய பெயரையும் இடம்பெறச் செய்வேன். இப்போது பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுள்ளேன்.
"இப்போது தலைமைப் பயிற்றுவிப்பாளர் விண்ணப்பங்களில் பெரிய பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. இப்போதைய தேர்வுக்கு ஜெயவர்தனே விண்ணப்பிப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அவர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.
"தேர்வுக்குழு என்ன முடிவெடுக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. சாஸ்திரி பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்பது பற்றி என் கருத்தை நான் இப்போதைக்கு முன்வைக்கப்போவதில்லை. அதுகுறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.
"பயிற்றுவிப்பாளரைத் தீர்மானிக்கும் அமைப்பு முறையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறேன்," என்று கங்குலி தெரிவித்தார்.

