லாடர்ஹில்: அறிமுக கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனியின் பந்துவீச்சால், வெஸ்ட் இண்டீஸ் அணியை 95 என்ற குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டியது இந்திய அணி.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணித் தலைவர் கோஹ்லி, "சைனி அபூர்வமானவர். ஐபிஎல் ஆட்டங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது," என்று பாராட்டினார்.
நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பந்தடிக்க பணித்தது இந்திய அணி.
கேம்பல், லூயிஸ் இருவரும் பந்தடிக்க, முதல் ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார்.
சுந்தரின் பந்தை விளாசிய கேம்பல், பாண்டியாவிடம் 'கேட்ச்' கொடுத்து ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து பூரண் களமிறங்கினார்.
அடுத்து புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை எதிர்கொண்ட லூயிசும் ஓட்டம் எதுவும் எடுக்காமல் போல்டாகி ஆட்டமிழந்தார்.
இவர்களை அடுத்து களமிறங்கிய பூரண், பொல்லார்ட் இருவரும் அதிரடியாக விளையாடி சில ஓட்டங்களைச் சேர்த்தனர்.
பூரண் 20 ஓட்டங்கள் சேர்த்திருந்தபோது ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீசின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.
ஒரு கட்டத்தில் அணித் தலைவர் பிராத்வெய்ட், பொல்லார்ட்டுடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் வகையில் நிதானமாக பந்தடித்தனர்.
6வது விக்கெட்டுக்கு இருவரும் 34 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் குர்னல் பாண்டியா வீசிய 15வது ஓவரில் 9 ஓட்டங்களுக்கு பிராத்வெய்ட் ஆட்டமிழந்தார்.
பொல்லார்ட் 49 ஓட்டங்களுக்கு சைனி பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 95 ஓட்டங்கள் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் நான்கு ஓவர் வீசிய சைனி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 17 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
96 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்கோடு இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க வீரர் தவான் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்து எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
24 ஓட்டங்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
வந்த வேகத்திலேயே வெளியேறி ஏமாற்றமளித்தார் ரிஷப் பன்ட்.
10 ஓவர்களில் 52 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.
மணிஷ் பாண்டே, கோஹ்லியும் வெளியேற குர்னல் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா இருவரும் அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர்.
குர்னல் பாண்டியா ஆட்டமிழந்ததால் களமிறங்கிய சுந்தர் சிக்சர் அடித்து 17.2 ஓவரில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்
தார்.

