வெற்றி் கிண்ணத்துடன் தொடங்கியது சிட்டி

வெற்றி் கிண்ணத்துடன் தொடங்கியது சிட்டி

2 mins read
7670fac4-ec09-496f-af2f-941ab899f69b
'கம்யூனிட்டி ஷீல்டு' காற்பந்துப் போட்டியில் கிண்ணம் வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடும் மான்செஸ்டர் சிட்டி வீரர்கள். படம்: ஏஎஃப்பி -

வெம்பிளி: வெற்றிக் கிண்ணத்துடன் இப்பருவத்தைத் தொடங்கியுள்ளது மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு.

நேற்று முன்தினம் நடந்த கம்யூனிட்டி ஷீல்டு கிண்ணத்திற்கான போட்டியில், லிவர்பூலை பெனால்டி முறையில் வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி.

வெம்பிளி அரங்கில் நடந்த இப்போட்டியில், இரு குழுக்களும் ஆட்டத் திறனை வெளிப்படுத்திய விதம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

டாவிட் சில்வா உதைத்த பந்தை ரஹீம் ஸ்டெர்லிங் 12வது நிமிடத்தில் கோலாக்கினார்.

அதன் பிறகு மேற்கொண்டு கோல் போடும் இரு குழுக்களின் முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

சிட்டியைவிட கோல் போடும் வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிய லிவர்பூல் வெற்றி பெறக்கூடும் என்று ஒரு கட்டத்தில் நினைக்கத் தோன்றியது.

இந்நிலையில், வேன் டைக் கொடுத்த பந்தை ஜோயல் மத்திப் தலையால் முட்டி எதிரணியின் கோல் வலைக்குள் தள்ளி சமன் செய்தார்.

ஆனால், வேன் டைக்கின் அடுத்த முயற்சியையும் சாலாமூன்று முறை கோல் வலையை நோக்கி உதைத்த வாய்ப்புகளையும் அவர்கள் கோலாக மாற்றத் தவறிவிட்டனர்.

குறிப்பாக, சாலா தலையால் முட்டித் தள்ளிய பந்தை, கோல் வலைக்குள் செல்லாமல் கைல் வாக்கர் தடுத்தது லிவர்பூலின் வெற்றியைப் பறித்துவிட்டது என்று சொல்லலாம்.

எனவே 1-1 என சமநிலை கண்ட ஆட்டம், பெனால்டி முறைக்குச் சென்றது.

அதில், சிட்டி வீரர் கேப்பிரியல் ஜீசஸ் உதைத்த பந்து உட்பட ஐந்து முறையும் பந்தை வலைக்குள் செலுத்தியது சிட்டி.

லிவர்பூலின் வைனால்டம் உதைத்த பந்தைக் கோலாகவிடாமல் சிட்டி கோல் காப்பாளர் கிளாடியோ பிராவோ, தடுத்துவிட்டார்.

இதனால் 5-4 என்று கிண்ணத்தைக் கைப்பற்றியது மான்செஸ்டர் சிட்டி.

ஆட்டத்திற்குப் பிறகு பேசிய லிவர்பூல் நிர்வாகி கிளோப், "வெற்றி பெற்றோமா என்பதைவிட எப்படி விளையாடினோம் என்பதுதான் முக்கியம்.

"இந்தக் குழு கடைசி ஐந்து நாட்களாக ஒன்றாக இணைந்து பயிற்சி செய்தது.

"பயிற்சியைவிட இன்றைய ஆட்டத்தில் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்," என்றார்.