மேன்யூவில் இணைந்தார் ஹேரி மெக்வாயர்

மேன்யூவில் இணைந்தார் ஹேரி மெக்வாயர்

3 mins read
a990847f-4460-49c1-b18b-798c78922307
எதிர்வரும் பருவத்தில் மேன்யூவிற்கு கூடுதலான கிண்ணங்களை வென்று தர தாம் ஆவலுடன் இருப்பதாக மெக்வாயர் கூறினார். படம்: ஏஎஃப்பி -

மான்செஸ்டர்: உலகின் ஆக விலைஉயர்ந்த தற்காப்பு ஆட்டக்காரராக ஹேரி மெக்வாயர் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவில் சேர்ந்துள்ளார்.

சர் அலெக்ஸ் ஃபெர்குசெனின் கீழ் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த யுனைடெட், பின்னர் சரிவுப் பாதையில் சென்றது.

இந்நிலையில், இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் முன்னணி வகிக்கும் குழுக்களான மான்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூலுக்கும் தனக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க யுனைடெட் முயற்சி எடுத்து வருகிறது. தற்காப்புப் பிரிவை வலுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, லெஸ்டர் சிட்டிக்கு விளையாடி வந்த மெக்வாயருடன் யுனைடெட் ஒப்பந்தம் செய்துள்ளது.

எந்த விலை கொடுத்து மெக்வாயரை யுனைடெட் வாங்கியது என்பது குறித்த விவரங்களை யுனைடெட் வெளியிடவில்லை. எனினும், லெஸ்டர் சிட்டிக்கு ஏறத்தாழ 80 மில்லியன் (S$134.41 மி.) பவுண்டு கொடுத்து இங்கிலாந்து நாட்டவரான மெக்வாயரை யுனைடெட் வாங்கியதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

டச்சு நாட்டவரான வெர்ஜில் வேன் டைக்கை வாங்க சவுத்ஹேம்டன் குழுவிற்கு கடந்த ஆண்டு ஜனவரியில் லிவர்பூல் செலுத்திய 75 மில்லியன் பவுண்டை இத்தொகை விஞ்சிவிட்டது.

யுனைடெட்டுடன் ஆறு ஆண்டுகால ஒப்பந்தத்தில் மெக்வாயர், 26, கையெழுத்திட்டார். அத்துடன், மேலும் ஓராண்டுகாலம் ஒப்பந்தத்தை நீட்டிக்கும் தெரிவும் அவருக்கு வழங்கப்பட்டது.

இன்று காற்பந்து விளையாட்டில் மிகத் திறன்வாய்ந்த தற்காப்பு ஆட்டக்காரர்களில் மெக்வாயரும் ஒருவர் என்று யுனைடெட் நிர்வாகி ஒலே குணார் சோல்சியார் புகழாரம் சூட்டினார்.

"ஆட்டத்தை நன்கு புரிந்துகொள்ளக்கூடியவர் மெக்வாயர். ஆடுகளத்தில் அவர் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் அளப்பரியது. நெருக்கடியான சூழலில் அவர் நிதானத்துடன் செயல்படக்கூடியவர்," என்று யுனைடெட்டின் இணையப்பக்கத்தில் சோல்சியார் கூறினார்.

"யுனைடெட் குழுவுடன் மெக்வாயர் நன்கு ஒருங்கிணைவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரிடம் சிறந்த பண்புநலன்கள் உள்ளன. எனவே, யுனைடெட்டில் அவர் இணைந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி," என்றும் சோல்சியார் பாராட்டினார்.

பிரெஞ்சு மத்திய திடல் ஆட்டக்காரரான பால் போக்பாவிற்கு அடுத்ததாக, யுனைடெட்டின் இரண்டாவது ஆக விலையுயர்ந்த ஆட்டக்காரராக மெக்வாயர் திகழ்கிறார். 2016ஆம் ஆண்டில் யுவெண்டஸ் குழுவிற்கு சாதனை அளவாக 89 மில்லியன் பவுண்டு செலுத்தி போக்பாவை யுனைடெட் வாங்கியது.

கடந்த பருவம் லெஸ்டர் சிட்டிக்காக 31 லீக் ஆட்டங்களில் மெக்வாயர் விளையாடினார். அவற்றில் மூன்று கோல்களையும் அவர் போட்டார்.

மெக்வாயரை மான்செஸ்டர் சிட்டியும் குறிவைத்தது குறிப்பிடத்தக்கது. எனினும், நிதி ரீதியாக யுனைடெட்டே அதிக பலத்தைக் காட்டி மெக்வாயரை வெற்றிகரமாக வாங்கியது. இந்த மகத்தான வாய்ப்பைத் தம்மால் மறுக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்ட மெக்வாயர், இருபது முறை பிரிமியர் லீக் கிண்ணத்தை ஏந்திய யுனைடெட்டிற்கு கூடுதலான கிண்ணங்களைப் பெற்றுத் தருவதே தமது இலக்கு என்றார்.

எதிர்வரும் பருவத்தை முன்னிட்டு யுனைடெட்டில் இணைந்துள்ள மூன்றாவது ஆட்டக்காரர் மெக்வாயர். இதற்கு முன்னதாக, சுவான்சி சிட்டியிடமிருந்து டேனியல் ஜேம்சையும் கிறிஸ்டல் பேலசிடமிருந்து ஆரன் வான் பிஸ்ஸாகாவையும் யுனைடெட் வாங்கியிருந்தது.

கடந்த பிரிமியர் லீக் பருவத்தின் முடிவில், பட்டியலில் ஆறாவது நிலையில் யுனைடெட் இருந்தது. எதிர்வரும் பருவத்தின் முதல் ஆட்டத்தில், இம்மாதம் 11ஆம் தேதி தனது சொந்த மண்ணில் செல்சியை யுனைடெட் எதிர்கொள்கிறது.