மும்பை: வரிச் சலுகை கிடைக்காமல் போகும் பட்சத்தில் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் அனைத்துலகப் போட்டிகளுக்கு வரிச் சலுகை வேண்டும் என்று அனைத்துலக கிரிக்கெட் மன்றம் எனப்படும் ஐசிசி நீண்ட நாட்களாக கேட்டு வருகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட உலகக் கிண்ண 20 ஓவர் போட்டிகளுக்கான வரிச் சலுகைக்காக இன்னும் காத்து கொண்டிருக்கிறது ஐசிசி.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தரக்கூடிய ஆண்டு வருமானப் பங்கில் இருந்து அந்தத் தொகையைக் கழித்துக்கொள்ள போவதாக ஐசிசி கூறியுள்ளதாகக் தெரிகிறது.
எனவே, இதுதொடர்பாக 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியை நடத்திய சட்ட நிறுவனம் ஒன்றை இந்திய கிரிக்கெட் வாரியம் அணுக வேண்டும் என்று நிர்வாகக் குழு எனும் சிஓஏ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டிற்கு முன் இந்தியாவில் நடந்த அனைத்துலகப் போட்டிகளுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக பேசிய பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர், "ஒருவேளை ஐசிசி அவ்வாறு செய்தால், பிசிசிஐக்கான பங்கு 405 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 40.5 மில்லியனாக குறைக்கப்படலாம்.
"அரசாங்கத்தின் வரிச் சட்டத்தை பிசிசிஐ மாற்ற இயலாது.
"ஐசிசி தலைவர் இதற்கு முன் பிசிசிஐ தலைவராக இருந்தவர் என்பதால் அவருக்கு இதுபற்றி தெரிந்திருக்க வேண்டும்.
"ஆனால், வரிச் சலுகை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.
"வரிச் சலுகை கிடைக்கவில்லை என்றால், 2021ல் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளையும் 2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவதில் பெரும் பிரச்சினை ஏற்படும்," என்றார் அவர்.

