அபார வெற்றியுடன் தொடங்கிய லிவர்பூல்

அபார வெற்றியுடன் தொடங்கிய லிவர்பூல்

2 mins read
936c8e4f-34a0-4fec-9ffb-eb0f0e0bc5fd
நார்விச் சிட்டியின் தற்காப்பு ஆட்டக்காரர்களும் கோல்காப்பாளரும் தம்மிடமிருந்து பந்தைப் பறிப்பதற்குள் அதை வலைக்குள் போட்டு லிவர்பூலின் இரண்டாவது கோலைப் போட்ட முகம்மது சாலா (நடுவில்). -

லிவர்பூல்: இப்பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி கோல் மழையுடன் தொடங்கியுள்ளது.

சென்ற பருவத்தில் லீக் பட்டி யலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த லிவர்பூல், பிரிமியர் லீக்கிற்கு புதிதாக நுழைந்துள்ள நார்விச் சிட்டியை நேற்று எதிர்கொண்டது.

கடந்த பருவத்ததில் லீக் பட்டத்தை சிட்டியிடம் நூலிழையில் இழந்த லிவர்பூல், இம்முறை புள்ளிகளைக் குவிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி முதல் ஆட்டத்திலேயே முத்திரை பதித்தது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஆதிக்கம் செலுத்தி, தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்திய லிவர்பூல் 4-1 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

முற்பாதி ஆட்டத்திலேயே நான்கு கோல்களையும் அது போட்டது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து கோல் வேட்டையில் தீவிரமாக இறங்கிய லிவர்பூலைச் சமாளிக்க முடியாமல் திண்டாடிய நார்விச், ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்திலேயே சொந்த கோல் போட்டது.

லிவர்பூலின் ஒரிகி பெனால்டி எல்லைக்குள் அனுப்பிய பந்தை நார்விச்சின் அணித் தலைவர் ஹேன்லி சொந்த வலைக்குள் அனுப்பினார்.

இந்தப் பின்னடைவிலிருந்து நார்விச் கடைசி வரை மீளவில்லை.

ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் முகம்மது சாலாவும் 28வது நிமிடத்தில் வெர்ஜல் வேன் டைக்கும் 42வது நிமிடத்தில் ஒரிகியும் லிவர்பூலுக்காக கோல்களைப் போட்டனர். பிற்பாதி ஆட்டத்திலும் லிவர்பூல் தாக்குதல்களை நடத்தியது. ஆனால் கூடுதல் கோல்கள் போட அதிர்ஷ்டம் அதற்குக் கை கொடுக்கவில்லை. ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் நார்விச் ஆறுதல் கோல் போட்டது.

முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பதிவு செய்த மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, கோல்காப்பாளர் அலிசன் பெக்கருக்கு ஆட்டத்தின்போது காலில் ஏற்பட்ட காயம் லிவர்பூல் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தி உள்ளது. காயம் காரணமாக முற்பாதி ஆட்டத்திலேயே அலிசன் திடலைவிட்டு வெளியேறினார். அதன்பின் அவரால் ஆட்டத்தைத் தொடர முடியவில்லை.

அவருக்குப் பதிலாக ஸ்பெயினைச் சேர்ந்த ஏட்ரியன் கோல்காப்பாளராகக் களமிறங்கினார். அலிசனுக்கு ஏற்பட்ட காயம் எந்த அளவுக்கு மோசமானது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை என்று லிவர்பூலின் நிர்வாகி யர்கன் கிளோப் தெரிவித்தார். ஆனால் வரும் புதன்கிழமை இஸ்தான்புலில் செல்சிக்கு எதிராக நடைபெறும் ஐரோப்பிய காற்பந்துச் சங்க சூப்பர் கிண்ணத்தில் அலிசனால் களமிறங்க முடியாது என்று அவர் கூறினார்.