போர்ட் ஆஃப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் இன்று கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது இந்திய அணி.
இந்நிலையில், இந்திய அணியின் நான்காம் நிலையில் ஆடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் 71 ஓட்டங்கள் குவித்த ஷ்ரேயால் ஐயருக்கா அல்லது அணி நிர்வாகத்தின், குறிப்பாக அணித் தலைவர் கோஹ்லியின் ஆதரவு பெற்ற, ரிஷப் பண்ட்டிற்கா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
பல முக்கியமான தருணங்களில் பண்ட் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து விடுவது கவலைக்குரிய விஷயம்.
அந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்கும் சிறந்த வீரரைத்தான் எந்தக் குழுவும் விரும்பும்.
இந்நிலையில், நான்காம் நிலை வீரராகக் களமிறங்கிய ஷ்ரேயால், கோஹ்லியுடன் நல்ல பங்காளித்துவம் அமைத்து இந்திய அணியின் இரண்டாவது ஒருநாள் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
பண்ட்டை ஐந்தாம் வீரராகவும் ஷ்ரேயாஸை நான்காம் நிலை வீரராகவும் களமிறக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வருவது அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காயத்தில் இருந்து மீண்டு, அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள தவான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று 20 ஓவர் போட்டிகளில் அவர் எடுத்தது முறையே 1, 23, 3 ஓட்டங்கள் மட்டுமே.
அதுபோல் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் ஓட்ட எண்ணிக்கை இரண்டுதான்.
எனவே இன்றைய போட்டியில் தனது ஆட்டத் திறனை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் தவான்.
இல்லையெனில் அவருக்குப் பதில் வேறு யாரையேனும் கோஹ்லி களமிறக்குவாரா என்பதும் நான்காம் நிலையில் விளையாடப் போவது யார் என்பதும் புதிராகவே உள்ளது. அதுபோல், பந்துவீச்சாளர் ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு நவ்தீப் சைனிக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.
அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும். ஆனால், பந்தடிப்பாளர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாடவேண்டியது அவசியம்.
இதன் பிறகு, இரு அணிகளும் வரும் 22ஆம் தேதி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன.

