ஹோம் யுனைடெட் காற்பந்துக் குழு பயிற்றுவிப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளாகவே ரேடி அவ்ரமோவிச் (படம்) பதவி விலகியுள்ளார்.
இவருக்கு இரண்டாம் கட்ட நுரையீரல் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டால் சிகிச்சைக்காக சொந்த நாடான செர்பியாவுக்கு இவர் திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“முற்றிலும் எதிர்பார்க்கப்படாத இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவ்ரமோவிச் விரைவில் குணமடைய, ஹோம் யுனைடெட் சார்பில் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்,” என்று ஹோம் யுனைடெட் குழுவின் பொது மேலாளர் பட்ரி கெண்ட் நேற்று கூறினார்.
சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் ஆக வெற்றிகரமான பயிற்றுவிப்பாளராக அவ்ரமோவிச் கருதப்படுகிறார்.
ஹோம் யுனைடெட்டின் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக அக்குழுவின் தற்போதைய உதவிப் பயிற்றுவிப்பாளர் நோ ரஹ்மான் பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், நிரந்தரப் பொறுப்புக்கு வேறொருவர் தேடப்படுவதாக ஹோம் யுனைடெட் அறிவித்தது.