வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மேன்யூ

வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மேன்யூ

2 mins read
d256b73a-a588-4de9-bdca-9c74697afeeb
நேற்றைய ஆட்டத்தில் கோல் போடத் தவறிய சங்கடத்தில் ஆட்ட முடிவில் தமது முகத்தை மறைத்துக் கொண்டு மைதானத்தை விட்டுச் செல்லும் பால் போக்பா. படம்: ராய்ட்டர்ஸ் -

உல்வர்ஹேம்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுைனடெட் அதன் நட்சத்திர வீரர் பால் போக்பாவை மையமாக வைத்தே தனது காற்பந்து உத்திகளை வகுத்து வருகிறது.

இதனால் அவர் சிறப்பாக விளையாடும்போது குழு வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்கத் தவறுவதில்லை.

அதேபோல், அவரின் ஆட்டத்திறன் அடிபடும்போது குழுவின் வெற்றி வாய்ப்பும் பாதிக்கப்படுகிறது. நேற்று உல்விஸ் குழுவுடனான பிரிமியர் லீக் போட்டியில் இதே பிரச்சினைதான் யுனைடெட்டுக்கு.

ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தபோது உல்வ்ஸ் கோல் எல்லைக்குள் போக்பா கீழே தள்ளி விடப்பட்டதால் யுனைடெட்டுக்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது.

ஆனால், பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி போக்பா உதைத்த பந்தை உல்வ்ஸ் கோல்காப்பாளர் கோல் புகாமல் தடுத்தார்.

போக்பா ஏற்கெனவே சென்ற பருவத்தில் மூன்று முறை பெனால்டி வாய்ப்புகளை கோல்களாக மாற்றத் தவறிய நிலையிலும், சென்ற வாரம் செல்சிக்கு எதிராகக் கிடைத்த பெனால்டியில் கோல் போட்ட ரேஷ்ஃபர்ட்டும் இருக்கும் நிலையில், கிடைத்த பெனால்டி வாய்ப்பு எதற்காக போக்பாவிடம் போயிற்று என காற்பந்து ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெஸ்ஸி லிங்கார்ட், லுக் ஷா, ரேஷ்ஃபார்ட் ஆகியோர் தட்டிச் சென்று கொடுத்த பந்தை 27ஆம் நிமிடத்தில் கோல் வலைக்குள் புகுத்தினார் மார்சியால்.

பின்னர் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய 10 நிமிடங்களில் உல்வ்ஸின் நெவஸ் போட்ட கோலால் ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது.

யுனைடெட்டின் தாக்குதல் ஆட்டக்காரர்களான ஆண்டனி மார்சியால், மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் ஆகியோர் எதிரணியினருக்கு எதிராக கோல் போடும் முயற்சியில் முனைப்புடன் விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் அதை செவி சாய்த்ததாகத் தெரியவில்லை என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

இங்கிலாந்துக்காக ஒரு காலத்தில் விளையாடிய ஆலன் ஷியரர் என்பவர் கோல் போடும் முயற்சியில் எதிரணியின் கிட்டத்தட்ட அனைத்து தற்காப்பு ஆட்டக்காரர்களும் நடுங்கும் விதத்தில் விளையாடுவார் என்றும் அந்த சுறுசுறுப்பும் முனைப்பும் மார்சியாலிடமோ ரேஷ்ஃபார்ட்டிடமோ காணப்படவில்லை என்றும் காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வீணடித்ததை நொந்து கொண்ட போக்பா ஆட்டம் முடிந்தபின் தமக்குத் தாமே எதையோ முணுமுணுத்துக் கொண்டபடி மேல்சட்டையால் முகத்தை மறைத்துக் கொண்டு மைதானத்தை விட்டுச் சென்றதாகக் செய்தித் தகவல்கள் கூறுகின்றன.