ஆர்ச்சரின் அசுர வேகத்தில் ஆட்டங்கண்ட ஆஸ்திரேலியா

லீட்ஸ்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆ‌ஷஸ் கிரிக்கெட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் லீட்ஸ் ஹெட்லிங்லேயில் தொடங்கியது. பூவா தலையா வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இைதயடுத்து பந்தடித்த ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ஹாரிஸ், அடுத்து வந்த கவாஜா ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

வார்னர்- லாபுக்சனே இணை சிறப்பாக விளையாடியது. வார்னர் 61 ஓட்டங்களுக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தார். 

டிராவிஸ் ஹெட், மேத்யூ வடே, கம்மின்ஸ் ஆர்ச்சரிடம் ‘டக் அவுட்’ ஆனார்கள்.

நேதன் லயன் 1, டிம் பெய்ன் 11, பேட்டின்சன் 2 ஓட்டங்களுக்கும் வெளியேற மொத்தம் ஆறு விக்கெட்டுகளை ஆர்ச்சரிடம் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா.

அதிகபட்சமாக லாபுக்சனே 74 ஓட்டங்கள் எடுத்தபோது, ஸ்டோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

ஆர்ச்சரின் அசுர வேகப் பந்துவீச்சில் ஆஸ்திரேலியா 179 ஓட்டங்களுக்குச் சுருண்டது. 

45 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்ச்சர் தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயினைப் போல் பந்துவீசுவதாகப் புகழ்ந்தார் ஆஸ்திரேலியாவின் வார்னர்.

“டேல் ஸ்டெயினுடன் ஒப்பிடுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் ஆர்ச்சர்.