ரகானே: சதமடிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை

ஆண்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தவேளையில், அணியை சரிவில் இருந்து மீட்பதே  முக்கியமாக இருந்தது என்று கூறியுள்ளார் இந்திய அணியின் துணைத் தலைவர் அஜிங்கிய ரகானே.

இந்த அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பந்தடிக்கத்  தொடங்கிய சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் 5, கோஹ்லி 9, புஜாரா 2 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய அணி தடுமாறியது. 

இந்நிலையில் களமிறங்கிய ரகானே இந்திய அணியைச் சரிவில் இருந்து மீட்டார். 81 ஓட்டங்கள் விளாசிய அவர், 11 ஓட்டங்களில் சதத்தைத் தவறவிட்டார்.

ஆட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், “களத்தில் நிற்கும் நேரத்தில் நான் அணியைக் குறித்து மட்டுமே நினைப்பேன்.

“அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது, சதமடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நான் சுயநலவாதியல்ல.

“81 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் அணிக்கு அது உதவியாக இருக்கும்.

“என் அணிக்காக நான் விளையாடினால், எனக்கு அது மட்டுமே முக்கியம். நான் சதத்தைப் பற்றி யோசித்தேன். ஆனால், அணி அப்போது 25 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

“அதனால், அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைத்தேன். என் சதம் குறித்து பெரிதும் கவலைப்படவில்லை. அது தானாக வரும்,” என்றார் ரஹானே.

“மேலும் கவுண்டி போட்டிகளில் நான் விளையாடியது என் பந்தடிப்புத் திறனை மேலும் வளர்த்துக்கொள்ள உதவியது. அது இன்றைய ஆட்டத்தில் கைகொடுத்தது,” என்றார்.

ரகானே கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில்தான் கடைசியாக சதமடித்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதற்கிடையே, இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, அஸ்வின், குல்தீப் யாதவ்  சேர்க்கப்படாததற்கு விமர்சனங்கள் எழுந்தன. அவர்களுக்குப் பதில் ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோர் இடம் பிடித்தனர்.

குறிப்பாக, அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏனென்றால், கடந்த முறை நடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஆட்டநாயகன் விருது பெற்றார். பந்துவீச்சு, பந்தடிப்பு என இரண்டிலுமே அவர் அசத்தினார்.

இந்நிலையில் இந்திய அணியில்  அஸ்வின் சேர்க்கப்படாததற்கான காரணம் குறித்தும் ரகானே விளக்கம் அளித்தார்.

இதில் அவர் கூறுகையில், “அஸ்வின், ரோகித் போன்ற அனுபவ வீரர்கள் ஆடும் லெவனில் இல்லாமல் இருப்பது வருத்தமான ஒன்றுதான். ஆனால், அணி மிகச்சிறப்பான இணைகளைத்தான் தேர்வு செய்யும். ஆடுகளத்தின் தன்மையை வைத்தே அணி நிர்வாகம் வீரரைத் தேர்வு செய்யும். 

“இந்த ஆடுகளத்தில் ஜடேஜா மிகவும் சிறப்பாக பந்து வீசுவார் என்றுதான் அவரை அணி தேர்வு செய்திருக்கிறது.

“மேலும், ஆறாவதாக ஒரு பந்தடிப்பாளரும் தேவை. அவர் 

பந்துவீசுவதிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதால் விஹாரியைத் தேர்வு செய்துள்ளனர். பயிற்றுவிப்பபாளர் மட்டுமின்றி அணித் தலைவரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்,” எனக் கூறியுள்ளார்.

Loading...
Load next