வில்லாவின் முதல் வெற்றி

லண்டன்: கடந்த பருவத்தில் இங்கிலாந்தின் இரண்டாம் நிலை காற்பந்துப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு இப்பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் ஆஸ்டன் வில்லா அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதுவரை மூன்று ஆட்டங்களில் களமிறங்கியுள்ள வில்லா, அதன் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வில்லாவும் எவர்ட்டனும் மோதின. இதில் 2-0 எனும் கோல் கணக்கில் வில்லா வெற்றி பெற்றது.  இந்த ஆட்டத்தை எவர்ட்டன் கைப்பற்றியிருந்தால் சிறிது நேரமாவது லீக் பட்டியலின் முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கும். ஆனால் ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் வில்லாவின் பிரேசில் நாட்டு தாக்குதல் ஆட்டக்காரர் தமது குழுவின் முதல் கோலைப் போட்டார். 

துவண்டுவிடாமல் விளையாடிய எவர்ட்டன், ஆட்டத்தைச் சமன் செய்ய முயன்றது. 

இடைவேளைக்கு முன்பு ஆட்டத்தைச் சமன் செய்ய அதற்கு பொன்னான வாய்ப்பு கிட்டியது. ஆனால் எவர்ட்டனின் டோமினிக் கால்வெர்ட்-லெவின் அனுப்பிய பந்து வலையைத் தொடுவதற்குள் அதைத் தடுத்து நிறுத்தினார் வில்லாவின் தற்காப்பு ஆட்டக்காரரான போன் எங்கல்ஸ்.

ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் எவர்ட்டனின் அலெக்ஸ் அயோபி அனுப்பிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளியேறியது. இவ்வாறு கோல் போட கிடைத்த சில நல்ல வாய்ப்புகளை எவர்ட்டன் தவறவிட்டது. ஆட்டம் முடிய சில நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய எல் காஸி வில்லாவின் இரண்டாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தார்.